`மூதாட்டி, சிறுவர்கள் கொடுத்த ஊக்கம்; 25 நாள்கள் அயராத பணி'- மழைநீரைச் சேமிக்க களறங்கிய இளைஞர்கள் #WhereisMyWater | Pudhukkottai youths take initiative to clean rivers

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (04/06/2019)

கடைசி தொடர்பு:16:41 (04/06/2019)

`மூதாட்டி, சிறுவர்கள் கொடுத்த ஊக்கம்; 25 நாள்கள் அயராத பணி'- மழைநீரைச் சேமிக்க களறங்கிய இளைஞர்கள் #WhereisMyWater

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளைச் சேர்ந்த கிராமப் பகுதி இளைஞர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தங்களது சொந்தப் பணத்தில், கடந்த ஒரு மாதமாக தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரி அசத்தி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், நீர் நிலைகள் தூர்வாரப்படாதது மிக முக்கிய காரணமாகும். இந்த நிலையில்தான் அரசு, பருவமழைக்கு முன்பே நீர் நிலைகளைத் தூர்வாரத் தவறிவிட்டது. இனி அரசை நம்பி எந்தப் பலனும் இல்லை என்று கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் தற்போது நீர் நிலைகளைத் தங்கள் சொந்தப் பணத்தில்  தூர் வாரி வருகின்றனர். முதலில் இளைஞர்கள் இந்தப் பணியை முன்னெடுத்தனர். தொடர்ந்து, பொதுமக்களும் தங்களால் இயன்ற பொருளுதவியைச் செய்து வருகின்றனர். 

கொத்தமங்கலம் பகுதியில் நீர் நிலைகளைத் தூர் வாரும் குழு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறும்போது, ``கடந்த 25 நாள்களுக்கும் மேலாக நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. ஆரம்பிக்கும்போது இத்தனை நாள்கள் தொடர்ந்து தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம் என்று நினைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள், நூறு நாள் வேலை செய்து தான் வைத்திருந்த சேமிப்புப் பணத்தை எங்களிடம் வழங்கினார். இதேபோல் சிறுவர்கள் சேர்ந்து வைத்திருந்த உண்டியல் பணத்தை எங்களிடம் கொடுத்து எங்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர். இரண்டு குளங்களைத் தற்போது தூர்வாரி உள்ளோம். எங்கள் பகுதியில் அம்புலி ஆற்றின் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வருகிறோம்.

தொடர்ந்து, இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட குளங்களைத்  தூர்வார வேண்டி உள்ளது. வெளி நாட்டு வாழ் இளைஞர்கள் தொடர்ந்து உதவி வருகின்றனர். அரசு நீர் நிலைகளைத் தூர்வாரும் என்று காத்திருக்க வேண்டாம். ஒவ்வோர் ஊர் இளைஞர்களும், தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரினால் நிச்சயம் வரும் பருவமழையை நாம் சேமிக்க முடியும்" என நெகிழ்ச்சியாகக் கூறினார்.