இப்தார் விருந்தில் நடந்த அணி பாலிடிக்ஸ்! - புறக்கணித்த ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள்  | ADMK Party inner dispute is exposed in iftar Functions

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:17:00 (04/06/2019)

இப்தார் விருந்தில் நடந்த அணி பாலிடிக்ஸ்! - புறக்கணித்த ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 

அ.தி.மு.க சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் குரான் ஓதியுள்ளார். நிகழ்ச்சியில் அன்வர்ராஜாவின் பேச்சு ஹைலைட்டாக அமைந்துள்ளது. இருப்பினும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வின் அணி பாலிடிக்ஸ் வெளிப்படையாகவே தெரிந்தது. 

அணி பாலிடிக்ஸ் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ்


ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவரின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த ஆண்டு நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 தமிழ்மகன் உசேன் வரவேற்றார். பல் வலி காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வழக்கம்போல மூன்றெழுத்து என்று தமிழ்மகன் உசேன் பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் பேசினார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசும்போது, ``அ.தி.மு.க-வை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கியவர்கள், நடிகர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். தினகரனுக்கும் அதே நிலைமைதான். அ.தி.மு.க-வை யாராலும் எதிர்த்து நிற்க முடியாது'' என்றதும் கைத்தட்டலில் கூட்ட அரங்கம் அதிர்ந்தது. 

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசுவதற்கு முன் குரான் ஓதினார். அதன் பிறகு அவர் ரஜினி வசனத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அதை அங்குள்ளவர்கள் ஆர்வமாகக் கேட்டு ரசித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காததால், அவரின் ஆதரவாளர்கள் பலர் வரவில்லை. இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. 

 அணி பாலிடிக்ஸ் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

இப்தார் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி-யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தம் இருந்தாலும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதற்கு முக்கிய காரணம் உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ``ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் யார், யாருடைய பெயர்கள் இப்தார் நோன்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் அச்சிடப்பட்டதோ அந்தப் பெயர்கள் மட்டும்தான் இந்த முறையிலும் போடப்பட்டிருந்தது. அதில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது எனக் கட்சித் தலைமை அறிவித்துவிட்டது. இதனால் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கட்சித் தலைமையிடம் சிலரின் பெயரைச் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். அதற்குக் கட்சித் தலைமை மறுத்துவிட்டது. மத்திய அமைச்சர் பதவி விவகாரத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சில மனக்கசப்புகள் இருந்தாலும் அதை வெளிப்படையாக இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில்தான் இருவரும் உள்ளனர். 

 அணி பாலிடிக்ஸ் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ்

இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பல் வலி காரணமாக முதல்வர் பங்கேற்கவில்லை என்ற தகவல் ஏற்பாட்டாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களும் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர். இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. இந்தத் தகவல் கிடைத்ததும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்தனர். ரவீந்திரநாத்குமார் எம்.பி-யும் வந்தார். கட்சியின் சீனியர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தபோது அதை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டே நிகழ்ச்சியைப் புறக்கணித்தது தெரியவந்தது" என்றனர்.