`கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்தால்..?'- இந்தி சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் பெ.மணியரசன் | P Maniyarasan slams Central government over hindi imposition in TN

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/06/2019)

கடைசி தொடர்பு:17:15 (04/06/2019)

`கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்தால்..?'- இந்தி சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்

மத்திய அரசு புதிதாக கொண்டு வரவுள்ள கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் 6-ம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாயம் என சொல்லப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்தி கட்டாயம் என்ற சொல் நீக்கப்பட்டது. இதனால் இந்தி திணிப்பு அபாயம் நீங்கியதாக தமிழ்நாட்டில் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ``இந்தி திணிப்பு கட்டாயமில்லை என்பது ஏமாற்று வேலை. தமிழர்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நயவஞ்சகமாக ஏமாற்றப் பார்ப்பதாகவும் மும்மொழிக் கொள்கை நீக்கப்பட்டால்தான் இந்தி திணிப்பு அபாயம் முழுமையாக நீங்கும்” எனத் தெரிவிக்கிறார்.

பெ மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், ``கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையில் இந்தி கட்டாயம் என்று சொல்லப்பட்டிருந்தது. தற்பொழுது அது நீக்கப்பட்டு, விரும்பும் மொழியை மூன்றாவது மொழியாக மாணவர்கள் 6-ம் வகுப்பிலிருந்து எடுத்துப் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மறைமுகமாக இந்தியைத்தான் திணிக்கிறது. மும்மொழிப் பாடம் கட்டாயம் என்பது இதில் நீக்கப்படவில்லை. கஸ்தூரி ரங்கன் பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்போது இந்தியா முழுவதும் பள்ளிப் படிப்பில் மூன்று மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் இப்போதுள்ள இருமொழித் திட்டம் மாற்றப்பட்டு, மூன்று மொழிகள் கற்பது கட்டாயம் ஆகும். தமிழ், ஆங்கிலம் போக மூன்றாவது மொழியாக மாணவர்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள்? இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே தனியார் நடத்தும் பல்லாயிரக்கணக்கான சி.பி.எஸ்.இ பள்ளிகளில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கற்பிக்கப்படுகிறது. அத்துடன் மத்திய அரசு தமிழ்நாட்டில் அதன் அலுவலகங்கள், நிறுவனங்கள், மக்கள் அன்றாடம் தொடர்புகொள்ளும் தொடர்வண்டித்துறை, வங்கிகள், அஞ்சலகம் அனைத்திலும் இந்தியே கோலோச்சுகிறது. அது மட்டுமல்ல நகரங்கள், கிராமங்கள், தெருக்கள், சந்து பொந்துகள் அனைத்திலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தியில் எழுதப்படுகின்றன. `சுவஜ் பாரத்' என்பதுபோல் இந்தி தமிழில் எழுதப்படுகின்றது. இருபத்து நான்கு மணி நேரமும் இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் பரப்பும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. பரிவாரங்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தீவிரப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில்தான் மாணவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

எந்தக் காலத்திலும் மும்மொழித் திட்டம் இந்தி மாநிலங்களில் செயல்பட்டதே இல்லை. அம்மாநிலங்களில் இந்தி அல்லாத வேறொரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டுமென்று கஸ்தூரி ரங்கன் கூறுவது கானல் நீர் குடிநீராகும் என்று சொல்வதுபோல் உள்ளது. ஏனெனில், மும்மொழிக் கொள்கையின் முதன்மை நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான். இந்தித் திணிப்பு வெறும் மொழிச் சிக்கல் அல்ல. அடிப்படையில் இனச்சிக்கல். இந்தி பேசும் இனம் இந்தியாவை ஆள்கிறது என்பதை எல்லா முனையிலும் நிலைநாட்ட வேண்டுமென்பதே வட இந்தியர்களின் முழு லட்சியம். இதைதான் பா.ஜ.க-வும் காங்கிரஸும் பிரதிபலிக்கின்றன” என தெரிவித்தார்.