`ஸ்விக்கியில் இருந்து மாதம் ரூ.25,000!' - நண்பனின் மோசடியால் மிரண்ட நகைப்பட்டறை அதிபர் | Fraud in the name of Swiggy

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (04/06/2019)

கடைசி தொடர்பு:21:30 (04/06/2019)

`ஸ்விக்கியில் இருந்து மாதம் ரூ.25,000!' - நண்பனின் மோசடியால் மிரண்ட நகைப்பட்டறை அதிபர்

தற்போதுள்ள காலகட்டத்தில் யார் எதில் எப்போது மோசடி செய்வார்கள் எனக் கணிக்க முடிவதில்லை. நண்பன் என்ற பெயரில் பழகிய சிலரே பெரும் மோசடி செய்துள்ளதால் உடைந்து போய் இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரசாத். 

ஸ்விக்கி

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார் பிரசாத். அந்த மனுவில், `சென்னை முகப்பேரில் நகைப் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறேன். என் உறவினர் மூலம் சங்கர் என்ற நபர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். அவர் ஒரு கட்டட கான்ட்ராக்டர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நீண்ட நாள்களாக என்னுடன் பழகி வந்தார். அடிக்கடி என் பட்டறைக்கு வந்து பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள் என்னிடம் வந்து, ‘நீங்கள் எதற்காக இப்படி நெருப்பிலும் புகையிலும் கஷ்டப்படுகிறீர்கள் அதற்குப் பதிலாக ஸ்விக்கி நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் போன் வாங்கி ஸ்விக்கிக்கு வாடகைக்கு விட்டால் மாதம் பிறந்தால் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை பணம் வந்து சேரும். அது மட்டுமல்லாமல் கமிஷனாகவும் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறினார். தவிர, `ஸ்விக்கி நிறுவனத்தில் பைக்குகளை வாடகைக்கு எடுக்கும் நபரை எனக்கு நன்றாகத் தெரியும்' எனக் கூறினார். அவரின் பேச்சை நம்பி நானும் மூன்று வண்டிகளையும் 6 ஆண்ட்ராய்டு போன்களும் வாங்கிக்கொடுத்தேன். 

மோசடி

இவை அனைத்தையும் மாதத் தவணையில்தான் வாங்கினேன். இவற்றை ஸ்விக்கி நிறுவனத்தில் பதிவு செய்வதாகக் கூறிவிட்டு எடுத்துச் சென்றார் சங்கர். இதன் பிறகு, என்னைத் தொடர்பு கொண்டவர், ` அங்கு பதிவு செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். பதிவான பிறகு மாதாமாதம் அந்த நிறுவனமே என் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுவிடும்' என நம்பிக்கையோடு பேசினார். ஆனால், அவர் கூறியபடி எதுவுமே நடக்கவில்லை. ஒரு ரூபாய்கூட என் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. நான் வாங்கிக் கொடுத்த பைக் மற்றும் செல்போன்கள் அனைத்தையும் தி.நகரில் உள்ள ஒருவருக்கு விற்றுள்ளார் சங்கர். அது பற்றித் தெரிந்து விசாரித்ததில் அந்த பைக்குகளை வைத்துச் சட்டவிரோதமான செயல்களைச் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுத்து என்னுடைய பைக்குகளையும் செல்போன்களையும் மீட்டுத் தர வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

புகார் கடிதம்

ஸ்விக்கி பெயரில் நடந்துள்ள மோசடி குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஸ்ரீதர், “நகைப் பட்டறை நடத்திவந்தவரிடம், ஸ்விக்கி என்ற நிறுவத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள். தான் ஏமாற்றப்பட்டது அறிந்து நேரடியாக சங்கரை சென்று பார்த்துள்ளார் பிரசாத். அப்போது, ‘ உன் பைக்கை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன். அதை வைத்து நகைத் திருட்டு உள்ளிட்ட செயல்கள் நடக்கின்றன. இது தொடர்பாக ஏதேனும் பிரச்னை செய்தால் உன் வண்டியை போலீஸில் சிக்க வைத்துவிடுவேன். வண்டி உன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் உன்னைத்தான் போலீஸார் பிடிப்பார்கள்’ என மிரட்டியிருக்கிறார் சங்கர். இதுதொடர்பாக நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தியதில் சங்கர் மேலும் 15 பேரிடம் மோசடி செய்துள்ளார். அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்" என்றார்.