மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்! - காரணம் என்ன? | The reason behind madurai collector's transfer

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/06/2019)

கடைசி தொடர்பு:19:15 (04/06/2019)

மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்! - காரணம் என்ன?

மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் தாசில்தார் சம்பூர்ணம் என்பவர் 4 ஊழியர்களுடன் உள்ளே சென்று ஆவணங்களை நகல் எடுத்தார் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கலெக்டராக இருந்த நடராஜனை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை கலெக்டர் நாகராஜன் மாற்றப்பட்டிருக்கிறார்.

மதுரை கலெக்டர் நாகராஜன்

இவர் பொறுப்பேற்ற பின் திருப்பரங்குன்றம் தேர்தலையும் கடந்த மே 23-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சிறப்பாக நடத்தினார். அப்போதே இவர் மீது ஆளும் கட்சியினர் கோபம் கொண்டனர் என்று சொல்லப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின்பும் மதுரை கலெக்டராக சிறப்பாக பல உத்தரவுகளைப் போட்டார். மக்கள் குறை தீர்க்கும் நாளில் வட்டாட்சியர்கள் மதுரைக்கு வரவேண்டாம், தாலுகாவிலேயே இருந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைப்பார்த்து இவரே மதுரையின் நிரந்தர கலெக்டராக இருக்க வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்தநிலையில்தான் அவர் இன்று அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்குப் பதிலாக வேறு கலெக்டரை நியமிக்காமல் பொறுப்பு டி.ஆர்.ஓ.வாக இருக்கும் சாந்தகுமாரை பொறுப்பு கலெக்டராக அறிவித்துள்ளார்கள்.

கலெக்டரின் திடீர் மாற்றத்துக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அங்கன்வாடி பணிக்கு நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு பல்வேறு காரணங்களால் நியமன உத்தரவு போடாமல் வைக்கப்படிருந்த நிலையில், அவர்களில் தகுதியான நபர்கள் யார் என்பதை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி சரியான நபர்களுக்கு பணி ஆணையை நேற்று அனுப்பியுள்ளார். இதனால் ஆளும் கட்சியினரால் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த அழுத்தத்தினால் அவர் மாற்றப்பட்டதாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ, அவர் தேர்தல் பணிக்காகத்தான் மாற்றலாகி வந்தார், அது முடிந்துவிட்டதால் அவரை விடுவித்து விட்டார்கள் என்கிறார்கள். தற்போது அவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக நியமித்துள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க