அஜாக்கிரதையால் பறிபோன உயிர்! - மனதைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் | CCTV Camera footage on Road accident

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (04/06/2019)

அஜாக்கிரதையால் பறிபோன உயிர்! - மனதைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்து சிசிடிவி காட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணாகபட்டு பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் பிரபு (வயது 35). இவரின் மனைவி தேவசுந்தரி. இவர்களுக்கு 2 குழந்தைகள். பிரபு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் சென்றுள்ளார். ஆந்திராவிலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் மீது பிரபு சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி லாரியின் சக்கரங்களுக்கிடையே விழுந்த பிரபு தலை நசுங்கி சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். லாரி அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரியை சிறைப்பிடித்த காவல்துறையினர் விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

சாலை விபத்து

இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாலையின் இருபக்கத்தையும் கவனிக்காமல் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் பிரபு ஓட்டிச்சென்ற பைக்கின் மீது மோதுகிறார். இதில் நிலைதடுமாறிய பிரபு லாரி சக்கரங்களுக்கிடையே விழுகிறார். லாரி சக்கரங்கள் பிரபு மீது ஏறிச் செல்கிறது. முதியவரோ இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போன்று அங்கிருந்து செல்கிறார். இதுகுறித்து தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.