`100 வருஷமா பிரமாண்ட நிழல் கொடுத்த மரம் இப்போ பட்டுப்போச்சு’ - கலங்கும் கிராமம் #MyVikatan | Namakkal lake becomes dry

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (05/06/2019)

கடைசி தொடர்பு:07:15 (05/06/2019)

`100 வருஷமா பிரமாண்ட நிழல் கொடுத்த மரம் இப்போ பட்டுப்போச்சு’ - கலங்கும் கிராமம் #MyVikatan

சேலம் அருகே உள்ள மலைப்பாங்கான இடம் ஜருகுமலை. இதன் அடிவாரத்தில் 2,700 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. சேலம், ராசிபுரம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 1911ல் பனமரத்துப்பட்டி ஏரியில் நீர்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்தனர். ஆங்கிலேயர்கள் இயல்பிலேயே அழகுணர்ச்சி கொண்டவர்கள் என்பதால் ஏரி நுழைவாயில் முன்னர் இரண்டு மரங்களை (இதை அப்பகுதி மக்கள் தூங்குமூச்சி மரம் என்கின்றனர்) வைத்தனர்.

நாமக்கல்
 

இந்த மரத்தின் வயது தற்போது 108 ஆண்டுகள். இவ்வளவு பழைமையான மரம் தற்போது பட்டுபோய் உள்ளது. இதை ஊர் மக்கள் சோகத்துடன் நம்மிடம் பதிவு செய்தனர்.

கா.முருகேசன் என்ற விவசாயிடம் கேட்டோம், ``எனக்கு இப்ப 75 வயசு ஆவுது. நான் சின்ன வயசு பையனா இருந்தப்ப எனது அப்பாவோடு ஆடு, மாடு மேய்க்க இங்க வருவேன். அப்ப இந்த இடம் சேலம், நாமக்கல் சுத்துப்பட்டுல இப்படி ஓர் அழகை பார்க்கவே முடியாது. அப்படி இருக்கும். வெள்ளை, வெள்ளேறுனு வரும் வெள்ளைக்காரங்களை நான் பார்த்திருக்கிறேன். எனது அப்பா காரையோராம உள்ள புல்வெளியில் ஆடு, மாடு மேய்க்கப் போவார். நான் இந்த மரத்தடியில்தான் விளையாடிகிட்டு இருப்பேன். நீர்ஏற்றத்த பாதுகாக்க வாட்ச்மேன் இருப்பாங்க. அவரு நம்ம ஊர்க்காரர் என்பதால் எங்க அப்பாவுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. 

முருகேசன்


இங்குள்ள ரெண்டு மரத்திலும் மாறி, மாறி நெறய பசங்க விளையாடுவோம். கண்ணாமூச்சி, மரம் ஏறி காய் பறிக்கறது, மரத்தின் உச்சி வர ஏறுவது உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவோம். மரம் பெருசாவா, பெருசாவா படர்ந்து விரிந்த கிளைகளைப் பார்க்கும் போது மிகுந்த அழகாக இருக்கும். இந்த மரங்களை வெள்ளையர்கள் வைத்ததுனு எங்க அப்பா சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட மரம். எனது வாழ்வில் பசுமையான நினைவுகளைக்கொண்ட இந்த இரண்டு மரமுமே பட்டுப் போய்விட்டது. ஆனால், எனது வாழ்க்கையில் அந்த மரத்துடன் உள்ள தொடர்பு பசுமரத்தாணி போலவே இன்றும் உள்ளது என்றார்.


 இந்த ஏரி ஏன் வற்றிப்போனது என்பது குறித்து, பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் சண்முகம் என்பவரிடம் கேட்டோம்,

மேட்டூர் டேம் வந்த பிறகு வெள்ளையர்கள் இதைப் பெருசா கண்டுக்கல. அதுமட்டுமல்லாமல் மழை இல்லாத காலத்தில இது வறண்டு போனது. அப்படி இருக்கையில் நிறைய கருவேலம் முள் முளைத்தது. இதை அகற்ற சேலம் மாநகராட்சி பெருசா எந்த நடவடிக்கையும் எடுக்கல. அப்புறம் ஆக்கிரமைப்பு உள்ளிட்ட காரணத்தால ஏரி வீணாகி வந்தது.

மரம்

இந்த நிலையில் ஆக்கிரமைப்பை அகற்றியே தீருவது என முடிவு செய்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து அகற்றிவிட்டோம். ஆனால் அதன்பின்னர் எங்கள் பகுதியில் ஏரி கால்வாசி நிரம்பும் அளவுக்குக் கூட மழையே இல்லை. இதனால சுத்துப்பட்டுலா இருக்கிற 18 கிராமமும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்குது. நீங்க கேட்டிங்களே இந்த மரம் ஆங்கிலேயேர் வைத்தது. அவர்கள் இந்த ஏரியைப் பராமரிப்பு செய்த போது வைத்த மரம் தற்போது 108 வயசு இருக்கும். அதுக்கும் மேல இருந்தாலும் குறைய இருக்காது. கடந்த பத்தாண்டாக  இந்த ஏரியில ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. இதனால இந்த இரண்டு பெரிய மரமும் பட்டுப் போய்விட்டது.

இந்த சேலம் மாநகராட்சிக்கே தண்ணீர் கொடுத்த பெருமையைப் பெற்றது. அவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த ஏரியில் உள்ள மரத்தை சேலம் மாநகராட்சியால் பாதுகாக்க முடியல. என்ன சொல்றது தம்பி. நாம் பழங்கால பெருமையெல்லாம் இழந்துகிட்டே வருகிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரியுது தம்பி என்றார் ஏக்கத்தோடு.