புற்றுநோய் எனத் தவறான ரிப்போர்ட் அளித்த தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை இல்லை - சுகாதாரத் துறை! | No action will be taken against the lab thet provided wrong report

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (05/06/2019)

கடைசி தொடர்பு:13:34 (08/06/2019)

புற்றுநோய் எனத் தவறான ரிப்போர்ட் அளித்த தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை இல்லை - சுகாதாரத் துறை!

பெண்ணிற்கு கேன்சர் இருப்பதாக தனியார் ஆய்வகம் கொடுத்த தவறான முடிவால் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை எனக் கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரஞ்சனி

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ரஞ்சனி (38)க்கு மார்பகத்தில் கட்டி உருவானது. அது புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகித்ததால், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயை உறுதிசெய்வதற்காகத் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கும், அரசு மருத்துவமனையில் அருகில் இருக்கும் தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் முடிவு வர தாமதமானது. தனியார் ஆய்வகம் அளித்த முடிவில் அது புற்றுநோய் கட்டி எனத் தெரிவித்தது. உடனே மருத்துவர்களும் ரஞ்சனிக்குப் புற்றுநோய்க்கான முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

கியூமோதெரபி


கீமோதெரபி சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளின் வீரியத்தால் தலைமுடி அனைத்தும் உதிர்தல், குமட்டல், வாந்தி, உடல் பலவீனம் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன. மருத்துவர்கள் இரண்டாம் கட்ட கீமோதெரபி சிகிச்சைக்கான நாள் குறித்த சமயத்தில் அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட திசு மாதிரியின் பரிசோதனை முடிவு வந்தது. அதில் ரஞ்சனியின் மார்பகத்திலிருந்தது புற்றுநோய் கட்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இரண்டாம் கட்ட கீமோதெரபிக்கான தயாரிப்புகள், புற்றுநோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. புற்றுநோயே இல்லாதவருக்கு புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் பெண்ணுக்குப் புற்று நோய் இருப்பதாக தவறான ரிப்போர்ட் கொடுத்த தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான வாய்ப்பு இல்லை என்று கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தனியார் ஆய்வகத்திற்குப் பெண்ணின் திசுக்களை அனுப்பியது மெடிக்கல் காலேஜின் தவறு எனவும். கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் ஆக்ட் (Clinical Establishments (Registration and Regulation) Act,) நடைமுறைப் படுத்தப்பட்டால்தான் தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.