‘ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய்!’ - மருத்துவமனையின் பெயரில் ஃபேஸ்புக்கில் அரங்கேறிய மோசடி | one kidney, 3 crore rupees - Facebook team cheats people

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (05/06/2019)

கடைசி தொடர்பு:10:29 (05/06/2019)

‘ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய்!’ - மருத்துவமனையின் பெயரில் ஃபேஸ்புக்கில் அரங்கேறிய மோசடி

கிட்னி

ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் பெயரில், சமூக வலைதளங்களில் ‘கிட்னி தேவை’ என விளம்பரப்படுத்தி, மர்ம நபர்கள் பலரிடம் பணத்தைக் கறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு சம்பத் நகர் பகுதியில், ‘கல்யாணி கிட்னி கேர் சென்டர்’ என்னும் மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையின் பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய மர்மநபர்கள், ‘கிட்னி தேவை என்றும், ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும்’ கூறி விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். இதனைப் பார்த்து பலரும், சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் இருந்த தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.

தன்னை கல்யாணி மருத்துவமனையின் டாக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த அந்த மர்ம நபர், ‘7,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் சீனியாரிட்டி அடிப்படையில் உங்களுடைய கிட்னியை எடுக்க முடியும்’ என ஒரு அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்து, பலரிடமும் பணத்தைக் கறந்திருக்கிறார். பணம் வாங்கிய நபரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், இன்டர்நெட்டில் மருத்துவமனையில் தொலைபேசி எண்ணைப் பிடித்து பேசியிருக்கின்றனர்.

அப்போதுதான், அந்த மருத்துவமனையின் பெயரில் மர்மநபர்கள் போலியான ஃபேஸ்புக் பக்கத்தைத்  தொடங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை அறிந்து பதறிப்போன மருத்துமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரபாகர், ஈரோடு எஸ்பி-யிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றனர்.

இந்த மோசடிக் கும்பல், வட மாநிலங்களில் இருந்து செயல்பட்டிருக்கலாம் என்றும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.