நீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay | Nilgiri Biomass zone On the brink of ruin

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (05/06/2019)

கடைசி தொடர்பு:10:53 (05/06/2019)

நீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay

இன்று, உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அதிகரிக்கும் கட்டுமானங்கள்... முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்ற காரணங்களால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.

நீலகிரி

இந்தியாவில் 14 உயிர்ச்சூழல் மண்டலங்கள் உள்ளன. பாதுகாப்பு, நில அமைப்பு மற்றும் இயற்கை கலாசார நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையில், நீலகிரி கடந்த 1986-ம் ஆண்டு, முதன் முதலாக உயிர்ச்சூழல் மண்டலமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 5,520 சதுர கி.மீ பரந்துவிரிந்துள்ளது.

மான்கள்

நீலகிரியில் 3,300 வகையான பூக்கும் தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 132 வகை அழியும் பட்டியலில் உள்ள தாவரங்கள். 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகை நீர் மற்றும் நிலவாழ் உயிரினங்கள், 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள், 39 வகை மீன்கள், 60 வகையான ஊர்வன ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன.

வண்ணத்து பூச்சிகள்

இந்தியாவில் உள்ள புலிகள் மற்றும் யானைகளில் பாதியளவு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளன. இந்த மண்டம், 4 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 யானைகள் வாழ்விடங்கள் உள்ள பகுதியாக விளங்கிவருகிறது. இன்று, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், வனத்தை ஓட்டி அதிகரிக்கும் கட்டுமானங்கள், ஓரினப் பயிர் சாகுபடி, முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்றவை நீலகிரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

யானைகள்

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) யின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில்,
“இந்தியாவில் உள்ள முக்கிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்குகிறது. அடர்ந்த வனங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களால், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

கட்டுமானங்கள்

இதனைத் தவிர்க்க, வனத்தை ஒட்டி அதிகரிக்கும் கட்டுமானங்களைத் தடுக்க வேண்டும். வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சுற்றுலா திட்டங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.