`நான்கரை மணி நேரமாக‌ உயிருக்குப் போராடிய கரடி!'- டாக்டர் வரல; துடிதுடித்து இறந்த பரிதாபம் | Sloth bear death near cunoor

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (05/06/2019)

கடைசி தொடர்பு:14:22 (05/06/2019)

`நான்கரை மணி நேரமாக‌ உயிருக்குப் போராடிய கரடி!'- டாக்டர் வரல; துடிதுடித்து இறந்த பரிதாபம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மக்கள் கண்முன்னே துடி துடித்து பெண் கரடி இறந்தது.

நுரை கக்கியபடி இறந்து கிடந்த கரடி

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் கரடி ஒன்று கீழே விழுந்து துடித்துக்கொண்டிருப்பதை பார்த்தனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். வனத்துறை ஊழியர்கள் சிலர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது வாயில் நுரை கக்கியபடி கரடி துடித்துக்கொண்டிருந்தது. வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்பு கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் வந்தனர். நீலகிரியில் வனக் கால்நடை மருத்துவர்கள் இல்லாத நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முயற்சி செய்தனர்.

வனப்பகுதியில் இறந்த கரடி

ஆனால், காலை 6 மணி முதல் 10.30 வரை வாயில் ரத்தமும் நுரையும் கக்கியபடி கை கால்கள் இழுத்து துடி துடித்து கரடி பரிதாபமாக உயிரிழந்தது. உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், ``இறந்துபோன இந்தக் கரடி கடந்த சில வாரங்களாக இரண்டு குட்டிகளுடன் உலவிவந்தது. இன்று காலை திடீரென வாயில் நுரையுடன் கீழே விழுந்து துடித்து இறந்தது. இரண்டு குட்டிகளின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை" என்றனர்.

வனத்துறையினர் தெரிவிக்கையில், ``இறந்தது 6 முதல் 7 வயது வரை உள்ள பெண் கரடி. வலிப்பு போன்று ஏற்பட்டு இறந்துள்ளது'' எனத் தெரிவித்தனர். ஆனால், காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ``தேயிலை தோட்டம் மற்றும் விளை நிலங்களில் உலவுவதால் கரடி விரும்பி உண்ணும் பழங்களில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.

இறந்து கிடக்கும் கரடி

உரிய விசாரணை மற்றும் உடற்கூறாய்வு நடத்தப்பட வேண்டும்" என்கின்றனர். கடந்த மாதம் கோத்தகிரி பகுதியில் குரங்குகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது. தற்போது பெண் கரடி குட்டிகளை விட்டு இறந்துள்ளது. தொடரும் இது போன்ற சம்பவங்களால் காட்டுயிர்களின் பாதுகாப்பு நீலகிரியில் கேள்விக்குறியாகியுள்ளது.