`கதவு எண், குடும்பத் தலைவரின் பெயர்!'- போர்டு வைத்து தண்ணீர் பிடிக்கும் கிராமம் | A village that divide water

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (05/06/2019)

கடைசி தொடர்பு:14:25 (05/06/2019)

`கதவு எண், குடும்பத் தலைவரின் பெயர்!'- போர்டு வைத்து தண்ணீர் பிடிக்கும் கிராமம்

தூத்துக்குடியில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிலும் வீட்டுக் கதவு எண், குடும்பத் தலைவரின் பெயரின் அடிப்படையில் வரிசை முறையைப் பின்பற்றி, கிடைக்கும் தண்ணீரை சண்டை, சச்சரவில்லாமல் பங்கிட்டுக்கொள்கிறார்கள், ஸ்ரீவைகுண்டப் பெருமாள்புரம் கிராம மக்கள்.  

தண்ணீரை பங்கிட்டுக் கொள்ளும் கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை விளாத்திகுளம் தாலுகாதான் கல்வி, தொழில், விவசாயம், பொருளாதாரம் என எல்லா வகையிலும் பின்தங்கிய பகுதி. வானம்பார்த்த கரிசல் நிலப்பகுதியான இப்பகுதியில், கரிமூட்டமும் மானாவாரி விவசாயமும்தான் பிரதான தொழில். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம்மூலம் எட்டு நாள்களுக்கு ஒருமுறை கிடைத்துவந்த தண்ணீர், தற்போது மேலும் தாமதமாகிறது. பல கிராமங்களில் கண்மாய்களும் ஊருணிகளும் வற்றிவிட்டன. ஆலமரம் போன்ற நிழல் பாங்கான பகுதிகளில் உள்ள சில கண்மாய்களின் அடிவாரத்தில் உள்ள கலங்கலான தண்ணீரை எடுத்து வடிகட்டித் தெளியவைத்து, ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்திவந்தனர். தற்போது நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டால், குடிநீர்த் தேவைக்கும் இதே தண்ணீரைப் பயன்படுத்திவரும் அவலநிலை உள்ளது.

தண்ணீர் பிடிப்பதற்காக கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டு

இதுதவிர, குடிநீருக்காக நல்ல தண்ணீர் எடுக்க, வைப்பாற்றுப் பகுதியில்  எட்டடி ஆழம் வரை ஊற்று தோண்டி, அதில் ஊறும் தண்ணீரை அகப்பை மூலம் எடுத்து குடத்தை நிரப்பி, தலைச்சுமையாகவும் சைக்கிள்களிலும் எடுத்துச்செல்கின்றனர். ஒரு குடம் நிரம்ப 40 நிமிடங்கள் வரை ஆகிறது. தற்போது, கொளுத்தும் வெயிலில் ஊற்றில் நீர்  ஊறுவதும் தாமதமாவதாகச் சொல்கின்றனர் அப்பகுதியினர். இருப்பினும், நீண்டநேரம் காத்திருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துச்செல்கிறார்கள். இந்த ஊற்றுத் தண்ணீரை எடுப்பதற்கும் முதல்நாளே அவரவர் குடங்களை வரிசையில் போட்டு இடம்பிடிக்க வேண்டும். அகப்பை மூலம் ஊற்றுத் தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபடுவது பெண்கள்தான். ஊற்றுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிப் பகுதிகளில், விளையாடச் செல்லும் சிறுவர்கள் மண் சரிந்தும், ஆழத்தில் சிக்கியும் உயிரிழக்கும் துயரச் சம்பவமும் சில சமயங்களில் நிகழ்கிறது.

குடும்பத் தலைவரின் பெயர்

இந்நிலையில், வைப்பாறு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டப் பெருமாள்புரம் கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிலும் வீட்டுக் கதவு எண், குடும்பத் தலைவரின் பெயரின் அடிப்படையில், வரிசை முறையைப் பின்பற்றி தண்ணீர் பிடிப்பதால், சச்சரவுகளின்றி பங்கிட்டுக்கொள்கிறார்கள். இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கூறுகையில், “எங்க ஊர்ல 250 வீடுகள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் இப்போ தண்ணீர் கிடைக்க 12 நாள்  வரை ஆகுது. எத்தனை நாளுக்கு ஒரு தடவை தண்ணீர் கிடைச்சாலும், ஊர்ல உள்ள வீட்டு எண்களின் அடிப்படையில், குடும்பத் தலைவர்களின் பெயர்களைக் குடிநீர் பைப் பக்கத்திலேயே போர்டு வச்சிருக்கோம்.

குடத்துடன் குழந்தை

அந்த போர்டில் உள்ள வரிசை எண்கள், பெயர்களின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு  ஆறு குடம் வீதம் தண்ணீர் பிடிச்சுக்குறோம். பக்கத்து ஊர்க்காரர்கள் யாருக்கும் தண்ணீர் கிடையாது. ஊருல உள்ள குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தனமா பிரிந்தவர்கள், ஊர்க்கமிட்டியில் பெயர்களைப் பதிவுசெய்து வைக்கணும். பதிவு வரிசை எண் அடிப்படையில் தண்ணீர் வழங்கிட்டு வர்றோம். தண்ணீர் குறைவான நேரம் வந்தாலும், எந்த வீட்டுக்காரர் கடைசியாகத் தண்ணீர் பிடிச்சாரோ, அதற்கு அடுத்த எண்ணில் இருந்து அடுத்த தண்ணீர் விநியோகம் தொடங்கும். இப்படியாக, கிடைக்கின்ற தண்ணீரை எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏதுமில்லாமல் பிரிச்சு பிடிச்சுக்கிறோம். கிடைப்பதைப் பங்கிட்டுக்கொள்வதுதானே நல்லது” என்றார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க