`பூட்டையும் உடைக்கல, துளையும் போடல!'- கதிகலங்க வைத்த வடமாநிலக் கொள்ளையர்கள் | Theft in Ariyalur shops, police investigation going on

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (05/06/2019)

கடைசி தொடர்பு:15:30 (05/06/2019)

`பூட்டையும் உடைக்கல, துளையும் போடல!'- கதிகலங்க வைத்த வடமாநிலக் கொள்ளையர்கள்

அடுத்தடுத்து 3 கடைகளில் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. இது வட மாநிலத்தவர்களின் கை வரிசையா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளை நடந்த இடத்தில் போலீஸ் மோப்ப நாய்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் கடைவீதியில் உள்ள ஓட்டுக் கட்டடத்தில் செல்போன் கடை உள்ளிட்ட மூன்று கடைகள் உள்ளன. இக்கடைகளைத் திறக்க வந்த கடையின் உரிமையாளர்கள் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது செல்போன் கடையில் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள், ஹோட்டல்களில் வைத்திருந்த உணவுப் பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மூன்று கடை உரிமையாளர்களும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கொள்ளை நடந்த கடை

அதேபோல், மற்றொரு புகாரில், கடையின் ஜன்னலை உடைத்து 70,000 மற்றும் 50,000 மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களின் அடையாளங்களைச் சேகரிக்கும் வகையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மாதிரி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு ஜன்னலை உடைத்து கொள்ளை

இது குறித்து சமூக ஆர்வலர் குமாரிடம் பேசினோம். ``வட மாநிலத்தவர்களால் அரியலூர் மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் குறைந்த சம்பளத்துக்காக அதிக அளவிலான வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இதுவே முதல் தவறு. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி வேலை கொடுக்கலாம். அத்தோடு இவர்கள் வருகைக்குப் பிறகுதான் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. செந்துறை, த.பழூர், ஓட்டக்கோவில் பகுதிகளில் இரவு நேரத்தில் திருட முயன்ற வடமாநில இளைஞர்களை பொதுமக்களே போலீஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளனர். ஆனால், அந்த வழக்குகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் திருடும் முறையும் வித்தியாசப்படும். அதை வைத்துதான் போலீஸார் வட மாநிலத்தவர்கள் மீது சந்தேகப்படுகிறார்கள். அத்தோடு கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்புகூட ஜெயங்கொண்டம் பகுதிகளில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று வரையிலும் போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. இம்மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இம்மாவட்டத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கும்'' என்று முடித்துக்கொண்டார்.