`முதல் நாளிலேயே 150-க்கும் அதிகம்!' - மாணவர் சேர்க்கையில் ஹாட்ரிக் படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி | Poovalupatti government school attracts parents

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (05/06/2019)

கடைசி தொடர்பு:17:50 (05/06/2019)

`முதல் நாளிலேயே 150-க்கும் அதிகம்!' - மாணவர் சேர்க்கையில் ஹாட்ரிக் படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளியின் தரம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் ஆச்சர்யப்படும் வகையில் உயர்த்தப்பட்டு வருகிறது. பள்ளியின் கட்டடத்தில் ஆரம்பித்து மாணவர்களின் சேர்க்கை வரை ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஆசிரியர்களின் தீவிர உழைப்பிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் புதிய கல்வியாண்டு தொடங்குவதையொட்டி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் திருப்பூர் பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாணவர் சேர்க்கையில் சாதனை புரிந்து வருகிறது. சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலாவிடம் பேசினேன்.

அரசுப் பள்ளி ஆசிரியருடன் மாணவர்கள்


``எங்கள் பள்ளியில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து அதற்கான டோக்கன் வழங்கி வந்தோம். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 600-ஐ தொடும் என்று நம்புகிறோம். இதற்குக் காரணம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வகுப்புகளிலும் ஸ்மார்ட் போர்டு, கிரானைட் தளமிட்ட வகுப்பு, விளையாட்டுக்கென தனி சீருடை, மிகக் குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படும் பரதம், சிலம்பம், கராத்தே, பறை இசை போன்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் அனைத்து வகையான கலைகளும் கற்றுத்தரப்படுவதே இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்களாகப் பெற்றோர்கள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். 

ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 200-ஐ தாண்டுகிறது என்பது பெருமையாக இருக்கிறது. தனியார் பள்ளிகளை உயர்த்திப் பார்க்கும் பெற்றோருக்கு அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கையை வரவைத்திருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, பள்ளியில் பாடங்களைக் கற்றுத்தருவதோடு நின்றுவிடாமல், அவர்கள் திறனை வளர்த்தெடுக்கப் பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறோம். எங்கள் பள்ளியைத் தத்தெடுத்திருக்கிற எஸ்.டீ. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பள்ளிக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அவர்களின் உதவியால்தான் எந்த அரசுப் பள்ளியிலும் இல்லாதவாறு அனைத்து வகுப்புகளிலும் ஸ்மார்ட் போர்டு பொருத்தப்பட்டுள்ளது.

வீட்டுப்பாடங்களைக்கூட தனியார் பள்ளிகளைப்போல டைரி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகப் பெற்றோருக்கு அனுப்பிவிடுகிறோம். பள்ளியின் பெயரில் வருடக் காலண்டர் அடித்து மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மேலும், மாணவர்கள் நலன் பற்றி பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து அவற்றைப் பூர்த்தி செய்கிறோம்'' என்றார்.