'எங்களுக்கு மினரல் வாட்டரே இதுதான்!' எப்போதும் வற்றாத மேலூர் தர்மக்குளம் | Melur people about Dharmakulam water source

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (05/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (05/06/2019)

'எங்களுக்கு மினரல் வாட்டரே இதுதான்!' எப்போதும் வற்றாத மேலூர் தர்மக்குளம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள 'தர்மக்குளம்' ஆண்டாண்டு காலமாக அரிட்டாபட்டி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவருகிறது. வெறுமனே தண்ணீர் தேவைக்காக மட்டுமன்றி, அம்மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருக்கிறது இந்தத் தர்மக்குளம்.

'எங்களுக்கு மினரல் வாட்டரே இதுதான்!' எப்போதும் வற்றாத மேலூர் தர்மக்குளம்

துரை மேலூர் அருகே இருக்கிறது அரிட்டாபட்டி கிராமம். 7 சிறிய மலைகள் சூழ பசுமையாகக் காட்சியளிக்கிறது. 2,000 ஆண்டுகள் பழைமையான சமண சிற்பங்கள், மகாவீரர் சிலை, தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்துக்குள் ஏராளமான குடைவரைக் கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. அரிட்டாபட்டி மலையில் அரிய வகை பறவையான லகர் பால்கன் பறவைகள் கூடுகட்டி வசித்துவருகின்றன. இப்படி அரிட்டாபட்டி மலை பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. 50-க்கும் அதிகமான சுனைகளும் இங்கிருக்கின்றன. அருகருகே ஏராளமான சுனைகள் இருப்பதால், நிலத்தடி நீர் அதிகளவில் இருக்கிறது. இங்கு வீற்றிருக்கும் ஏராளமான மரங்களுக்கு நடுவே தாமரை மலர்கள் சூழ எங்கும் பசுமை போர்த்தியபடி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது தர்மக்குளம். வருடம் முழுவதும் வற்றாத தர்மக்குளம் இன்றளவும் அரிட்டாபட்டி மக்களின் தண்ணீர் தேவையைப் போக்கி வருகிறது.

தர்மக்குளம்

ரவிச்சந்திரன் அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறும்போது, "சித்திரை, வைகாசியில் அதிக வெப்பம் இருக்கும். மாவட்டம் முழுதும் வறட்சி இருக்கும். ஆனால், எங்க பகுதியில் மட்டும் பெரும்பாலும் வறட்சி இருக்காது. எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் அதிகமாகவே இருக்கிறது. ஆண்டு முழுவதும் வற்றாத எங்க ஊரின் தர்மக்குளம்தான் அதற்கு சாட்சி. எனக்கு விவரம் தெரியவே இன்னைக்கு வரைக்கும் குளம் வற்றிப்போய் பார்த்ததில்ல.

எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து இந்தத் தர்மக்குளத்தைத்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க. எனக்கு விவரம் தெரியவே, யாரும் இந்தக் குளத்தின் உள்ளே இறங்க மாட்டாங்க. அசுத்தப்படுத்த மாட்டாங்க. தினமும் காலை, மாலை என இருவேளையும் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இங்கிருந்து தண்ணீரை எடுத்துச் சென்று பயன்படுத்திட்டு வர்றாங்க. மழைநீர் வரும் வழிகளை எந்த அசுத்தமும் இல்லாமல் அடிக்கடி தூர்வாரி விடுவோம். இப்போ ஒரு சிலருங்க, பணம் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறாங்க. ஆனால், கிராமத்தில் உள்ள பலரும் தர்மக்குளத்துத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு இதுதான் மினரல் வாட்டர். இந்தத் தண்ணீரைக் குடிப்பதால, எங்களுக்கு நோய்நொடிகள் ஏதும் ஏற்படுவதில்லை. அதே நேரத்துல ஆரோக்கியமாகத்தான் இருக்கோம்" என்று பெருமை பொங்கக் கூறுகிறார்.

தர்மக்குளம்

"கொஞ்ச வருஷத்துக்கு முன்னால எல்லாம் மாங்குளத்தில இருந்து, கல்லம்பட்டிக்கு தர்மக்குளத்து கரைவழியாகத்தான் மலை ஏறிப்போகணும். அப்படித்தான் மாங்குளத்தில் இருந்து கல்லம்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போன ஒரு பெண்ணை கணவர் சண்டைபோட்டு விரட்டிவிட்டாரு. அந்தப் பொண்ணு அப்பா வீட்டுக்கு புலம்பிக்கிட்டே போச்சு. அப்படிப் போகும்போது தர்மக்குளத்துக்கிட்ட வரும்போது மயக்கம் வந்திருக்கு. உடனே, தர்மகுளத்துல உட்கார்ந்து தண்ணீரை அள்ளி முகத்தில தெளிச்சிக்கிட்டு, குடிச்சிட்டு அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, 'என்னை எப்படி எல்லாம் கட்டிக்கொடுத்தாங்க, இப்படி விரட்டி அடிச்சிட்டாங்களே' என்று தர்மக்குளத்துகிட்ட சொல்லி புலம்பியிருக்கு. அவங்க அப்பா வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே, கணவர் திரும்ப அவர் வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போய்ட்டாரு. அப்புறம் இருவரும் சேர்ந்து தர்மக்குளத்துக்கு நன்றி சொல்லிட்டுப் போயிருக்காங்க" என்கிறார் ரவிச்சந்திரன்.

அரிட்டாபட்டி மலை

"தர்மக்குளம் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாம, இதுமாதிரி பல நல்ல காரியங்களைச் செய்கிறது என்பது எங்கள் மக்களின் நம்பிக்கை. வெளியூர்ல இருந்து எங்க ஊர் ஆண்களைத் திருமணம் செஞ்சுகிட்டு வரும் பெண்கள், திருமணத்துக்கு அடுத்தநாள் காலையில எழுந்து குளிச்சு, புதுசேலை உடுத்தி தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த குடத்தில் தர்மக்குளத்தின் நீரை எடுத்துச் சென்று சமைக்க வேண்டும். அன்று கண்டிப்பாகத் தர்மக்குளத்து தண்ணீரைத்தான் அவங்க பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது எங்களின் நம்பிக்கை. இன்னைக்கும் இது தொடருது. எங்களின் நம்பிக்கையும் வீண்போனதில்லை. வல்லூறு, ராசாளி, லகான் பால்கன் ஆகிய பறவைகள் இங்கு கூடுகட்டி வசிக்கின்றன. இவற்றின் தாகத்தையும் தர்மக்குளம்தான் தணிக்கிறது. எங்களோட அடையாளமே இந்தத் தர்மக்குளம்தான்" என்கிறார்.

இப்படி, அன்றாடத் தண்ணீர்த் தேவையோடு, இந்த மக்களின் ஆன்மிகத் தேடலுக்கும் தர்மக்குளம் பயன்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கைகளைவிடவும், இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தக் குளத்தை வழிபடுவதைவிடவும், அதைப் பராமரிக்க இந்த மக்கள் காட்டும் அக்கறைதான். நம்மூரின் கிணறுகளிலிருந்து கங்கை வரை நாம் செய்ய வேண்டியது இதைத்தான்.


டிரெண்டிங் @ விகடன்