‘வட மாநிலங்களில் தமிழ் விருப்பப்பாடம்’ - ஐந்தே மணி நேரத்தில் ட்வீட்டை நீக்கிய எடப்பாடி | Tamilnadu CM Delete his tweet about Hindi Imposition

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (05/06/2019)

கடைசி தொடர்பு:10:12 (06/06/2019)

‘வட மாநிலங்களில் தமிழ் விருப்பப்பாடம்’ - ஐந்தே மணி நேரத்தில் ட்வீட்டை நீக்கிய எடப்பாடி

புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி சில வருடங்களாக ஆலோசனை நடத்தி வந்த டி.ஆர்.எஸ் சுப்பிரமணியன் தலைமையிலான குழு கடந்த 2016-ம் வருடம் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கியிடம் சமீபத்தில் அந்த அறிக்கை வழங்கப்பட்டது.

மாணவர்கள்

அதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களைப் புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. குறிப்பாக  இந்தி பேசாத மாநிலங்களில் தங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதுபோல் உள்ளது என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். 

மும்மொழிக் கொள்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, மக்களின் கருத்துகளை கேட்டபின்னரே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை செயல்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்பது வரைவு அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டரில், ``பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக கற்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் பழைமையான மொழியான தமிழுக்கு செய்யும் சேவையாக இருக்கும்'' என குறிப்பிட்டிருந்தார்.

நீக்கப்பட்ட ட்வீட்

இவர் ட்வீட்டுக்கு பலரும் பலவித கருத்துகளைக் கூறி வந்தனர். இந்தியை ஏற்றுக்கொண்டு தமிழை பிற மாநிலங்களில் கற்பிக்க வேண்டும் என்பதுபோல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இதைத் தொடர்ந்து தான் ட்வீட் செய்த ஐந்து மணி நேரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அது நீக்கப்பட்டிருக்கிறது.