`பரிதவித்த முதியவர்; அழுத குழந்தை!' - 3 மாதங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர் | This government bus conductor gives free drinking water to passengers

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (05/06/2019)

கடைசி தொடர்பு:19:35 (05/06/2019)

`பரிதவித்த முதியவர்; அழுத குழந்தை!' - 3 மாதங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர்

அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்து வரும் பயணிகளுக்கு இலவசமாகத் தண்ணீர் கொடுத்துப் பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்.

தஞ்சாவூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிபவர் திருஞானம். இவர் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பாட்டிலில், வீட்டில் இருந்து  தண்ணீர் பிடித்து எடுத்துக்கொண்டு பயணிகளுக்குக் கொடுக்கிறார். பயணிகளிடம் டிக்கெட் கேட்கும்போதே உங்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் தருகிறேன் என அக்கறையோடு கூறுகிறார். பயணிகளின் தாகம் தீர்க்கும் நடத்துநரின் இந்தச் செயலைப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து திருஞானத்திடம் பேசினோம்,``நான் 12 வருடங்களுக்கும் மேலாக அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகிறேன். எனக்கும் என்னோடு பணிபுரியும் டிரைவருக்கும் ஒவ்வொரு நடையும் தஞ்சாவூரில் இருந்து கிளம்பும்போதும், மதுரையில் இருந்து திரும்பும்போதும் பாட்டிலில் தண்ணீர் பிடித்து எடுத்துச் செல்வது வழக்கம்.

பேருந்தில் பயணித்த பெரியவர் ஒருவர் அவசரமாக ஏறிவிட்டதால் தண்ணீர் பாட்டில் வாங்காமல் வந்துவிட்டார். நெஞ்சே அடைக்கும் அளவுக்கு அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டுவிட்டது. எந்த ஊருக்குப்  போக வேண்டும் என்பதைக்கூட சொல்ல முடியாமல் அவருக்கு நாக்கு வறண்டு போனது. அவரின் நிலையை உணர்ந்த நான் உடனே என்ன பெரியவரே குடிக்கத் தண்ணி வேண்டுமா எனக் கேட்டேன். ``ஆமாங்க கொஞ்சம் தண்ணீர் இருந்தா கொடுங்களேன், உங்களுக்குப் புண்ணியமா போகும்'' எனச்  சொன்னார். உடனே நான் டிக்கெட் கொடுப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து அவரது தாகத்தைத் தனித்தேன். தண்ணீர் குடித்தபிறகுதான் தெளிவுக்கு வந்தார். ஒரு வயதுக் குழந்தை ஒன்று தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்க வைத்தேன்.

தினமும் எவ்வளவுபேர் இதுமாதிரி நம் பேருந்தில் தாகத்தோடு தவித்துப் பயணித்திருப்பார்கள் என அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது கடுமையான வெயில்காலம் வேறு. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வெயில் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. அவசரமாக வரும் பயணிகள் தண்ணீர் பாட்டில் வாங்காமல் வந்து விடுகின்றனர். சிலர் மறந்துவிட்டும் வருகின்றனர். இவர்களுக்காக நாமே தண்ணீர் எடுத்துச்சென்று கொடுக்கலாம் என எனக்குத் தோன்றியது.

என்னிடம் 15 பாட்டில்கள் இருக்கின்றன. அதில், தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்வேன். அந்தப் பாட்டில்களை எடுத்துக்கொண்டு சென்று பயணிகளுக்குக் கொடுக்கிறேன்.`தண்ணி தாகம் எடுத்தால் கேளுங்கள் குடிக்கத் தண்ணீர் தருகிறேன்' எனச் சொல்லிவிடுவேன். அதன்படி தாகம் எடுத்தால் தண்ணீர் கேட்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்துச் சென்று கொடுப்பேன். `குடித்தபிறகு ரொம்ப நன்றிங்க' என்று சொல்வாங்க. `குடிக்கத் தண்ணீர்தானே கொடுத்தேன். இதில் என்னங்க இருக்கு' என்பேன். இதுமாதிரி 3 மாதங்களுக்கு மேலாகச் செய்து வருகிறேன். இதைப் பயணிகள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டுகின்றனர். எங்க துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இவை எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததோடு மனநிறைவையும் தந்தது. இதற்கு என்னோடு பணிபுரியும் டிரைவர் ராஜா என்பவரும் ஒரு காரணம். ஏனென்றால், என்னோட இந்தச் செயலை முதலில் பாராட்டியவரே அவர்தான். இனி கோடையில் மட்டுமல்ல, வருடம் முழுவதும் தண்ணீர் எடுத்துச்சென்று பயணிகளின் தாகத்தைத் தீர்ப்பேன்'' என்கிறார். நாமும் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லுவோமே...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க