நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! - பட்டுக்கோட்டை சோகம் | Pattukkottai student commits suicide after scoring low marks in NEET

வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (05/06/2019)

கடைசி தொடர்பு:21:27 (05/06/2019)

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! - பட்டுக்கோட்டை சோகம்

பட்டுக்கோட்டையில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வைஷியா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இரண்டு சக்கர வாகனத்துக்கான ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். இவரின் மகள் வைஷியா அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். நன்றாக படிக்கக்கூடிய மாணவியான வைஷியா, `டாக்டருக்கு படிக்க வேண்டும்; அதுதான் என் லட்சியம்' என பெற்றோர்களிடம் கூறி வந்துள்ளார். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதியிருக்கிறார்.

நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று மதியம் வெளியானது. இதில் வைஷியா 720 மதிப்பெண்ணுக்கு 230 எடுத்ததாகத் தெரிகிறது. இதனால், வைஷியா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மதியம் 3.30 மணியளவில் வைஷியா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வைஷியாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் வைஷியா இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு அழுதுகொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவர், ``நான் படிச்சு டாக்டராக வேண்டும் எனக் கூறி வந்தாள். நல்லாதான் பரீட்சை எழுதியிருக்கேன் என நம்பிக்கையோடு கூறினாள். அவருடைய சித்தப்பா கண் மருத்துவராக இருக்கிறார். டாக்டர் ஆக வேண்டிய பிள்ளை இப்படி கருகிக் கிடக்கிறாளே'' எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க