`கல்வியை தனியார்மயமாக்குவதே புதிய கல்விக் கொள்கை! - சு.வெங்கடேசன் கண்டனம் | Madurai MP Su Venkadesan speaks about new education policy

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/06/2019)

கடைசி தொடர்பு:12:51 (06/06/2019)

`கல்வியை தனியார்மயமாக்குவதே புதிய கல்விக் கொள்கை! - சு.வெங்கடேசன் கண்டனம்

புதிய கல்விக்கொள்கை என்பது கல்வியை தனியார்மயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

சு. வெங்கடேசன்

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை வரைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்மொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சி செய்வதாக தமிழகத்திலிருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 

இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழியை கட்டாயமாக்கவில்லை என்பதோடு மட்டும் விட்டுவிட முடியாது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வி மீதான மாநில அரசின் உரிமை பறிப்பு, இந்தி - சம்ஸ்கிருத திணிப்பு, கல்வியை தனியார்மயமாக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, இதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ்நாட்டிலிருந்து அதிகளவு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் மதுரை. எனவே, மதுரைக்காக குரல் கொடுப்பது என்பதே தமிழ்நாட்டுக்காக குரல் கொடுப்பதுதான்.

சு.வெங்கடேசன்

தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், மொழி என தமிழ் சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக நிற்போம். தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பேன். மதுரை தொகுதியின் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். மதுரை, சிவகங்கை, விருதுநகர் பகுதிகள் வளமான கலாசார பின்னணி கொண்ட பகுதிகள். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் வளமான வணிக சமூகம் இருந்துள்ளது. ஆனால், தொல்லியல் துறைக்கே இதுகுறித்த சரியான பார்வை இல்லை. முழுமையான தொல்லியல் வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதை முழுமையாகக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம். மக்களின் ஆற்றலால்தான் மாநில அரசு மும்மொழிக் கொள்கை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்தது'' என்றார்.