நிபா வைரஸ் எதிரொலி: கேரள எல்லையில் தயார் நிலையில் சுகாதாரத்துறை | Nipah virus impact; Tamil Nadu Monitoring in Kerala border

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (06/06/2019)

கடைசி தொடர்பு:08:10 (06/06/2019)

நிபா வைரஸ் எதிரொலி: கேரள எல்லையில் தயார் நிலையில் சுகாதாரத்துறை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கேரளா எல்லைப் பகுதிகளில், சுகாதாரக் குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நிபா வைரஸ் - மருத்துவர் குழு

கேரள மாநிலம் கொச்சினில், கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பலருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தேனி மாவட்டம், தமிழகத்தையும்  கேரளாவை இணைக்கும் பகுதி. தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகள், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கும் பகுதிகள். நிபா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்தப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அரசு மருத்துவர் தலைமையில், சுகாதாரப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லையைக் கடந்து தமிழகப் பகுதிகளுக்குள் வரும் வாகனங்களை சோதனைசெய்யும் அவர்கள், யாருக்கேனும் காய்ச்சல் அல்லது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா எனக் கண்காணிக்கின்றனர். போடி மெட்டு அருகே உள்ள முந்தல் பகுதியில், டெம்புச்சேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழுவினர், கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

கண்காணிப்பு

காய்ச்சலின் தாக்கம் இருப்பதாகத் தெரியவரும் நிலையில், உடனடியாக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளனர்.  இதுவரை யாரும் காய்ச்சல் பாதிப்புடன் வரவில்லை எனக் கூறும் சுகாதாரப்பணியாளர்கள் இந்தச் சோதனை தொடரும் என்று தெரிவிக்கின்றனர்.