வேலைக்காக கேரளா சென்றுவரும் மக்கள் - தீவிர கண்காணிப்பில் குமரி மாவட்டம்! #Nipah | nipah virus action in kanniyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (06/06/2019)

கடைசி தொடர்பு:11:50 (06/06/2019)

வேலைக்காக கேரளா சென்றுவரும் மக்கள் - தீவிர கண்காணிப்பில் குமரி மாவட்டம்! #Nipah

கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால், அங்கு வேலை செய்துவரும் தமிழகத் தொழிலாளர்கள் காய்ச்சலுடன் ஊருக்கு வந்தால் கண்காணிக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிபா - கேரளா

கேரள மாநிலத்தில், நிபா வைரஸ் காரணமாக கல்லூரி மாணவர், இளம்பெண் என இரண்டுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பராவாமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் தெரிவித்தார். 

மதுசூதனன்


இதுகுறித்து டாக்டர் மதுசூதனன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில், நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள எல்லையில் அமைந்துள்ள கிள்ளியூர், திருவட்டாறு தாலுகாக்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து அதிகமானோர் கேரளத்தில் பணிபுரிந்துவருகின்றனர். தினசரி சென்றுவருபவர்கள், தங்கிப் பணிபுரிபவர்கள் அதிகம்.  எனவே, கேரள மாநிலத்தில் பணி செய்துவிட்டு வரும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அவர்களைக் கண்காணித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்துள்ளோம். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.