ஏலகிரியில் கோடை வெயிலால் தவிக்கும் குரங்குகள்! - தண்ணீர் அளிக்கும் மாணவிகள் | Young girls put water for monkeys

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (06/06/2019)

கடைசி தொடர்பு:13:26 (06/06/2019)

ஏலகிரியில் கோடை வெயிலால் தவிக்கும் குரங்குகள்! - தண்ணீர் அளிக்கும் மாணவிகள்

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள குரங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், இளம்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தண்ணீர்த்தொட்டி வைத்து, அதில் தண்ணீரை நிரப்பி அசத்திவருகின்றனர்.
 

தண்ணீர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏலகிரி மலையை `ஏழைகளுக்கான ஊட்டி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். இந்த மலையில் ஆயிரக்கணக்கான குரங்குகள் இருக்கின்றன. கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவுவதால் குரங்குகள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாகச் செத்துமடிகின்றன. இதையறிந்த ஜோலார்பேட்டை கோடியூரைச் சேர்ந்த பகவத் மற்றும் அவரது அண்ணன் புகழேந்திராஜா இருவரும் `க்யூரிங் தி நேச்சர்’ (இயற்கையைச் சீரமைத்தல் குழு) என்ற அமைப்பைத் தொடங்கி ஏலகிரி மலையில் குரங்குகள் தண்ணீர் குடிக்க ஆங்காங்கே தொட்டி வைத்து தண்ணீர் நிரப்பிவருகிறார்கள்.

மாணவிகள்

இந்தச் சமூக அர்ப்பணிப்பில் பகவத் மற்றும் அவரது அண்ணனின் மகள்களும் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த இளம்பெண்கள் கல்லூரிக்குச் செல்வதால் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் டூவீலரில் 35 லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஏலகிரி மலைக்குச் சென்று தண்ணீர் நிரப்புகிறார்கள். 
இதுபற்றி பகவத்திடம் பேசினோம். ``அப்துல்கலாம் இறந்த அன்னைக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்துனாங்க. நாங்க ஒரு நாளோடு அஞ்சலி செலுத்திவிட்டு போகக் கூடாது என்பதால் அப்துல்கலாமின் நினைவாக ஏதாவது செய்யணும்'ன்னு ஆசைப்பட்டோம். அப்படி ஆரம்பித்ததுதான் குரங்குகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சி.

குரங்குகள்

எங்க பொண்ணுங்க தென்றல், காவியா, ஓவியா, ஸ்ருதி, ஸ்வாதி, மகன் எழில் ஆகியோருடன் வார இறுதியில் இந்தச் சேவையைச் செய்கிறோம். இதற்காக யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட பணம் வாங்கியதில்லை. பணம் வாங்கினால் சேவையில் ஈடுபாடு குறைஞ்சிடும். பெரிசா ஒண்ணும் செலவில்லை. பெட்ரோல் மட்டும்தான் போட்டுக்கிட்டு போறோம். அடுத்த தலைமுறையினருக்கு நாங்க முன்னுதாரணமாக இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

ஏலகிரி

ஏலகிரி மலையில் முத்தனூர் குளம் இருக்கு. அதுல, காட்டு விலங்குகள் மட்டும்தான் தண்ணீர் குடிக்கும். அந்தக் குளத்தை தூர்வாரி சொந்தப் பணத்தில் சரி செஞ்சோம். இப்போது, அங்கு வசிக்கிற 100 குடும்பங்கள் அந்தக் குளத்து தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துகிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார் பெருமையோடு.