நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! - தொடரும் சோகம் | Villupuram student monisha commits suicide over Neet result

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (06/06/2019)

கடைசி தொடர்பு:17:31 (06/06/2019)

நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! - தொடரும் சோகம்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் மோனிஷா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்வர் மோகன் (48). இவர் அ.ம.மு.க கட்சியில் ஒன்றிய மீனவர் அணிச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளான மோனிஷா (18), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டூ படித்தார். ப்ளஸ் டூ தேர்வில் 690 மதிப்பெண் எடுத்த இவர் புதுச்சேரி உறுவையாறு பகுதியிலுள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மோனிஷா 31 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதன் காரணமாக நேற்று முழுவதும் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோனிஷாவின் சகோதரிகள் கதவைத் தட்டியிருக்கின்றனர். கதவு திறக்கப்படாததால் கூச்சலிட்டு கதறியிருக்கின்றனர். அதைக்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கின்றனர். ஆனால், அதற்குள் தனது துப்பட்டவை மின் விசிறியில் மாற்றி தூக்கிட்டு உயிரிழந்திருந்தார் மோனிஷா. உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறை மோனிஷாவின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கடந்த வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக இதே விழுப்புரம் மாவட்டத்தில் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க