`தமிழனின் கலை நிச்சயம் உலக அளவில் பேசப்படும்!' - ஆசிய சிலம்பம் போட்டியில் சாதித்த இந்தியா | India won over all championship in silambam tournament

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/06/2019)

கடைசி தொடர்பு:16:50 (06/06/2019)

`தமிழனின் கலை நிச்சயம் உலக அளவில் பேசப்படும்!' - ஆசிய சிலம்பம் போட்டியில் சாதித்த இந்தியா

இந்திய அணி மொத்தமாக 52 தங்கம், 55 வெள்ளி, 93 வெண்கலம் வென்று" ஓவர் ஆல் சேம்பியன்ஷிப்" பட்டத்தைத் தட்டியது.

கடந்த மாதம் நாகர்கோவிலில் நடைபெற்ற நான்காவது ஆசிய சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த மாணவர்கள் `ஓவர் ஆல் சேம்பியன்ஷிப்' பட்டம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

சிலம்ப போட்டி

இதுகுறித்து அகில இந்திய சிலம்பம் ஃபெடரேஷனின் பொதுச்செயலாளர் செல்வராஜிடம் பேசினோம்.``கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் மற்ற நாட்டில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். கம்புச் சண்டை, ஒற்றை வாள்வீச்சு, நடுக்கம்பு, சுருள்வாள் வீச்சு என 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், 3 முதல் 10 வயதினருக்கான பிரிவில் 22 தங்கம்,13 வெள்ளி,14 வெண்கலம் வென்ற இந்திய அணி, 11 முதல் 14 வயதினருக்கு நடத்தப்படும் சப் ஜூனியர் பிரிவில் 14 தங்கம்,16 வெள்ளி, 20 வெண்கலம் வென்று சாதனை படைத்தது. அடுத்தபடியாக சீனியர், ஜூனியர் என தனித்தனி போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி மொத்தமாக 52 தங்கம், 55 வெள்ளி, 93 வெண்கலம் வென்று `ஓவர் ஆல் சேம்பியன்ஷிப்' பட்டத்தைத் தட்டியது.

நம் பாரம்பர்ய கலையான சிலம்பத்தை உலக அளவில் கொண்டுசெல்லும் நோக்கத்துடன்தான் எங்களின் சிலம்பம் அணி களமிறங்கியுள்ளது. அதன் முதல்படியாக வெளிநாடுகளில் நடக்கும் எல்லா போட்டிகளிலும் எங்களுடைய சொந்த செலவில் கலந்து பதக்கங்கள் வெல்ல ஆரம்பித்திருக்கிறோம். சிலம்பம் குறித்த ஆர்வமும் மக்களிடம் அதிகரித்துள்ளது. தற்போது இரண்டு வயது சிறுவர்கள்கூட ஆர்வத்துடன் சிலம்பம் கற்றுக்கொள்ள வருவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழனின் கலை நிச்சயம் உலகளவில் பேசப்படும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.