`தாய்க் கழகத்துக்கு வந்தால் சீட் கிடைக்கும்!' - அ.ம.மு.க-வுக்கு வலைவீசும் அ.தி.மு.க | Come and join with our party, ADMK invites AMMK cadres

வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (06/06/2019)

கடைசி தொடர்பு:15:47 (06/06/2019)

`தாய்க் கழகத்துக்கு வந்தால் சீட் கிடைக்கும்!' - அ.ம.மு.க-வுக்கு வலைவீசும் அ.தி.மு.க

சீட் கிடைக்கும் என அ.தி.மு.க. இணைந்த நெல்லை அ.ம.மு.க.வினர்

அ.ம.மு.க-வினரை அ.தி.மு.க-வுக்கு வரும்படி பகிரங்கமாகவே அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தாய்க் கழகத்துக்கு வந்தால், தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற வாக்குறுதி  அ.ம.மு.க-விலிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 22 தொகுதிகளின் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள 13 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்றாலும் தோல்விக்கு என்ன காரணம் என அ.தி.மு.க தலைமை ஆலோசனை நடத்தியது. அப்போது அ.ம.மு.க பிரித்த ஓட்டுகளால்தான் சில தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து அ.ம.மு.க கூடாரத்தைக் காலி செய்ய ஸ்கெட்ச் போட்டு காயை நகர்த்தத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க-வினர். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்திலிருந்து மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உட்பட 15 நிர்வாகிகள், அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர். நெல்லையைப் போல தர்மபுரி மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகளிடம் அந்தந்த மாவட்ட அ.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். 

 சீட் கிடைக்கும் என வாக்குறுதி அளித்த  எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``தேர்தல் தோல்விக்கு சில காரணங்கள் இருந்தாலும் அ.தி.மு.க-வின் ஓட்டுகளை அ.ம.மு.க பிரித்துவிட்டது. அந்த ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்திருந்தால் பெரியகுளம் உட்பட கூடுதலாக 5 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றியிருப்போம். 

குறிப்பாக அ.தி.மு.க-வின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கு அ.ம.மு.க வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளே காரணம். இதே நிலை உள்ளாட்சித் தேர்தலில் நீடித்தால் அ.தி.மு.க-வுக்குதான் சிக்கல். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் இந்தமுறை அ.தி.மு.க கூட்டணிக்கு கிடைக்கவில்லை என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.  தினகரன் பேச்சால் அதிருப்தியில் இருக்கும் அ.ம.மு.க-வினர், தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் சேர விருப்பம் தெரிவித்துவருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அ.ம.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வரும் முக்கிய நிர்வாகிகளுக்கு நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும். 

  தினகரன்

இதற்கிடையில் பா.ஜ.க-வுடன் பலமான கூட்டணி அமைத்துதான் இந்தத் தேர்தலை நாங்கள் சந்தித்தோம். எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தால் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் மெஜாரிட்டிக்குத் தேவையான சீட்கள் இடைத்தேர்தலில் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் கிடைத்த தோல்வி எங்களுக்கு ஒருபாடம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற தேர்தல் யுக்தியை மாற்றி அமைக்கவுள்ளோம்.

பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்துவருகின்றனர். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், எங்கள் கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை" என்றார். 

 அ.ம.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையின் மீது அதிருப்தியடைந்தவர்களும் சசிகலாவின் விசுவாசிகளும் இணைந்ததால்தான் அ.ம.மு.க உதயமானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றபோது அ.தி.மு.க தலைமையே கடும் அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு பல்வேறு சவால்களைக் கடந்து அ.ம.மு.க தமிழகத்தில் மாபெரும் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க-வினர் குறுக்கு வழியை பின்பற்றிவருகின்றனர். தேர்தல் நேரத்தில் அ.ம.மு.கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை அ.தி.மு.க-வில் சேர்த்துவிட்டால் தினகரன் பலவீனமடைந்துவிட்டதாக தப்புக் கணக்குபோடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும். இந்த ஆட்சியின் காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தினகரன் பதிலடி கொடுப்பார். அப்போது தெரியும் தினகரனின் பலம்" என்றனர்.