`30,000 லிட்டர் வேணும்; ஆனா, 5,000 லிட்டர்தான் கிடைக்குது!' - தண்ணீரின்றித் தவிக்கும் குன்னூர் அரசு மருத்துவமனை | Water scarcity in coonoor government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (06/06/2019)

கடைசி தொடர்பு:17:05 (06/06/2019)

`30,000 லிட்டர் வேணும்; ஆனா, 5,000 லிட்டர்தான் கிடைக்குது!' - தண்ணீரின்றித் தவிக்கும் குன்னூர் அரசு மருத்துவமனை

நீலகிரி மாவட்டம் குன்னூர் மருத்துவமனையில் சில நாள்களாகத் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நோயாளிகள் நீரின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை

நீலகிரி மாவட்டத்திலேயே ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதியாக குன்னூர் நகரம் உள்ளது. குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. 43.6 அடி உயரமுள்ள இந்த அணையில் பாதி அளவுக்கு மேல் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது. 30 வார்டுகள் உள்ள குன்னூர் நகராட்சி தினமும் சுமார் 80,000 பேருக்குக் குடிநீர் வழங்க வேண்டும். தற்போது 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடம் குடிநீர் ரூ.15 கொடுத்து விலைக்கு வாங்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குன்னூர் அரசு மருத்துவமனையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அரசு மருத்துவமனை

குன்னூர் மருத்துவமனையில் 70 உள்நோயாளிகள் உள்ளனர். 20 கழிப்பறைகள் உள்ளன. மேலும், மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவைகளைக் கொண்ட அந்த மருத்துவமனையின் பயன்பாட்டுக்கென ஒரு நாளைக்கு சுமார் 30,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 10 ,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் கடந்த இரண்டு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள்  கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனை 

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஒரு நாளைக்கு ஊட்டி மருத்துவமனைக்கு ஒரு லட்சம் லிட்டரும், குன்னூர் மருத்துவமனைக்கு 30,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. தற்போது 5,000 லிட்டர் தண்ணீர் ஆயிரம் ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்குகிறோம். இருந்தும் சமாளிக்க முடியவில்லை. அவசரத் தேவைக்கு மட்டும் தண்ணீர் உள்ளது. நோயாளிகள் வார்டுகளில் குளிக்க அனுமதிப்பதில்லை. நகராட்சியிடம் கூடுதலாகத் தண்ணீர் கேட்டுள்ளோம்'' என்கின்றனர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``160 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 16 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது ஆனால், தற்போது 0.5 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கமுடிகிறது. என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளோம்'' என்கின்றனர்.