`நாங்களும் டிவியில் வரப்போறோம்!' - அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம் | TN government School students and teachers express happiness over Launch of education Channel

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (06/06/2019)

கடைசி தொடர்பு:18:36 (06/06/2019)

`நாங்களும் டிவியில் வரப்போறோம்!' - அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

அரசு கேபிள் தொலைக்காட்சியில் 'கல்வி தொலைக்காட்சி' என்ற புது சேனல் இனி ஒளிப்பரப்பாகும் என பள்ளிக் கல்வித்துறை சார்பாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணியாக நேற்று முதல் அரசு கேபிளில் அலைவரிசை எண் 200-ல் `கல்வி தொலைக்காட்சி' சேனல், நிகழ்ச்சிகள் சோதனை முறையாக ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்களிடம் கருத்து கேட்டோம்.

அரசுப் பள்ளி

 

ஆரோக்கியராஜ் - இடைநிலை ஆசிரியர் விழுப்புரம்

ஆரோக்கியராஜ்``அரசின் 'கல்வி தொலைக்காட்சி' உண்மையில் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த சேனல் மூலம் `மாணவர்களின் சாதனைகள், சிறப்பான பயிற்சி வகுப்புகள், தனித்துவமாகச் செயல்படும் பள்ளிகள், ஆசிரியர்கள் எனக் கல்வி சார்ந்த நிறைய செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட உள்ளது' எனப் பள்ளிக் கல்வித்துறையிலிருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, தொழில்நுட்பத்தில் மற்ற பள்ளிகளைவிடச் சிறப்பாக எங்கள் பள்ளி செயல்படுவதால் 'மணியோசை' என்ற தலைப்பில் எங்கள் பள்ளியை வீடியோ எடுத்துச் சென்றுள்ளனர். இது எங்கள் பள்ளிக்கான அங்கீகாரம் என்பதைத் தாண்டி, எங்களை மற்ற பள்ளிகள் முன்மாதிரியாக எடுத்து அவர்களின் பள்ளியின் தரத்தை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகளும் ஒளிபரப்பப்பட உள்ளதால் அவர்களின் தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கும். அரசின் இந்த முயற்சி உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார் நம்பிக்கையுடன்.

சாதனாசாதனா - ஆறாம் வகுப்பு மாணவி ( கோனேரிக் குப்பம் ) :

"நாங்களும் இனிமே டிவியில் வரப்போறோம் அக்கா. வீட்ல டிவி வைச்சுக்கிற அளவுக்கு வசதியில்லை. ஆனா, அதே டிவியிலேயே நாங்க வரப்போறோம்ங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் என் ஃப்ரெண்டுகூட இங்கிலீஷ்ல பேசுறது, என் ஃப்ரெண்டு ஓட்டப்போட்டியில பரிசு வாங்குறது எல்லாம், இனிமே டிவியில வரும்னு எங்க டீச்சர் சொல்லியிருக்காங்க'' என்கிறார் ஆர்வமுடன்.

 ரூபன் - எட்டாம் வகுப்பு ( திண்டிவனம் ) :ரூபன்

``நான் நிறைய பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கியிருக்கேன். ஆனா இதுவரை ஒருமுறைகூட டிவியில வந்ததில்லை. `கல்வி தொலைக்காட்சி' மூலமா அடிக்கடி இனி டிவியில் வருவேன்னு எங்க ஸ்கூலில் சொல்லிருக்காங்க. எங்க ஸ்கூலில் 1330 திருக்குறள் சொல்ற பசங்களை வீடியோ எடுத்துட்டு போயிருக்காங்க. கூடிய சீக்கிரம் டிவியில் வந்து அசத்தப்போறோம்'' என்றார் மகிழ்ச்சியாக.

இந்தக் கல்வி தொலைக்காட்சிக்காக அரசாங்க நிதியில் இருந்து 1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பள்ளிகளில் கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து வீடியோக்கள் எடுக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு நீட் பயிற்சிகளும் இந்த சேனல் மூலம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.