வாங்காத கடனைக் கட்டச் சொல்லி நோட்டீஸ்... கதறும் கரும்பு விவசாயிகள்! | sugarcane farmers seek cbi enquiry on loan fraud by parivate sugar factories

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (06/06/2019)

கடைசி தொடர்பு:18:25 (06/06/2019)

வாங்காத கடனைக் கட்டச் சொல்லி நோட்டீஸ்... கதறும் கரும்பு விவசாயிகள்!

மிழகத்தில் சில தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளின் பெயர்களில் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாக கரும்பு விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரும்பு விவசாயிகள்

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறுகையில், ``தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகளின் பெயர்களில் ரூ.600 கோடிக்கு மேல் மோசடியாக சில தனியார் சர்க்கரை ஆலைகள் கடன் வாங்கியுள்ளன. கரும்பு பதிவுசெய்ய வேண்டும், வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டும் என்று சொல்லி, விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று, வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இப்படியாக, நிலமில்லாத கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பெயர்களிலும் கடன் வாங்கியுள்ளனர். இந்தத் தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தற்போது, அந்தக் கடனைக் கட்டச் சொல்லி வழக்கறிஞர்கள் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. வாங்காத கடனை எப்படி விவசாயிகள் திருப்பிக் கட்டுவார்கள்? விவசாயிகளுக்குத் தெரியாமல் அவர்கள் பெயரில் பெரும் தொகையை சில தனியார் சர்க்கரை ஆலைகள் வாங்கியிருப்பது மிகப்பெரிய மோசடி. எனவே, கரும்பு விவசாயிகளின் நிலையை அறிந்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க