சரியாகப் பராமரிக்கப்படாத தண்ணீர்த் தொட்டிகள் - வனத்துறை அலட்சியத்தால் உயிரிழக்கும் மான்கள்? | Activists urges forest department to arrange water for wild animals in forest

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (06/06/2019)

சரியாகப் பராமரிக்கப்படாத தண்ணீர்த் தொட்டிகள் - வனத்துறை அலட்சியத்தால் உயிரிழக்கும் மான்கள்?

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை வனப்பகுதியில் வசிக்கும் மான்கள், வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை விட்டு சாலைக்கு வருவதால், வாகனங்கள் மோதி மான்கள் இறந்து போகும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை வனப்பகுதியில் 100க்கும் அதிகமான மான்கள், காட்டுப்பன்றி, மயில்கள் வசித்து வருகின்றன. தொடர்ந்து நிலவும் வறட்சியால், வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வனத்துறை சார்பில் வன விலங்களுக்குள் தண்ணீர் அருந்தும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டிகள் பலவும் சிதிலமடைந்து தண்ணீர் இல்லாமல் கிடக்கிறது. இதனால், தண்ணீர் தேடி சாலைகளுக்கு வரும் வனவிலங்குகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மோதி பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க வனப்பகுதிகளில் கோடை மட்டுமன்றி மற்ற நேரங்களிலும் வனத் தொட்டிகளைப் பராமரித்து தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

வனவிலங்கு ஆர்வலர் விஸ்வா கூறும்போது, ``சிவரக்கோட்டை வனப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வனவிலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. மான்கள் தண்ணீர் தேடிக் குடியிருப்புகளுக்குள் வரும்போது லாரி, பஸ் மோதி இறக்கின்றன. சில மர்ம நபர்களால் வேட்டையாடப்படும் சம்பவமும் நடக்கிறது. வனத்துறை சார்பில் வன உயிரினங்களுக்குப் போதுமான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சிவரக்கோட்டை வனப்பகுதியிலிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மான்கள் இறந்து போய் இருக்கும்.

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மயில்கள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், இங்குள்ள சிமென்ட் தொட்டிகள் உடைந்து கிடப்பதால், தொட்டிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அவற்றைச் சரி செய்து வன விலங்களுக்குத் தேவையான தண்ணீரை நிரப்பி வருகிறோம். அடுத்ததாக திருமங்கலம் சிவரக்கோட்டை பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் நிரப்பி அந்த வன உயிரினங்களுக்குக் கொடுக்க உள்ளோம்'' என்கிறார்.