2,07,904 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து... ஏன்!? | 2,07,904 driving licenses temporarily cancelled in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (06/06/2019)

கடைசி தொடர்பு:18:59 (06/06/2019)

2,07,904 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து... ஏன்!?

''போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2018-ம் ஆண்டு 1,52,475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்த ஆண்டு மே மாதம் வரை 55,429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், தற்காலிகமாக ரத்து செய்யும்படி போக்குவரத்துத்துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.''

2,07,904 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து... ஏன்!?

சென்னை மாநகரில் மட்டும் 2018 முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை சுமார் ஒன்றரை வருடத்தில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரம் சென்னை. சுமார் ஒரு கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது சென்னையின் மக்கள்தொகை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால், திண்டாடிக்கொண்டிருக்கிறது நகரம். இதில் போக்குவரத்தும் விதிவிலக்கல்ல. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்வோர், தொழிலாளர்கள் எனக் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மாநரின் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெருகிவிட்டது. ஒரு கட்டத்தில் 'போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வராதோ' என்ற சந்தேகம் சென்னையில் வாகனம் ஓட்டும் அனைவருக்கும் வரத்தான் செய்கிறது. 

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில்தான், சென்னை மாநகரக் காவலுக்கு உட்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்தது சென்னை போக்குவரத்துக் காவல்துறை. வாகன ஓட்டிகள், சாலை விதிகள் மற்றும் சிக்னல்களில் நிற்காமல் செல்லும்போது, ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவும் காவல்துறை, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், எதற்கும் வாகன ஓட்டிகள் கட்டுப்படவில்லை. விபத்துகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

'விதிகள் கடுமையானால்தான் இதைச் சரிசெய்ய முடியும்' என்பதை உணர்ந்த போலீஸார், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2018-ம் ஆண்டு 1,52,475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்த ஆண்டு மே மாதம் வரை 55,429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், தற்காலிகமாக ரத்து செய்யும்படி போக்குவரத்துத் துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். தங்கள் பரிந்துரையை ஏற்று, சம்பந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாகப் போக்குரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், விதிகளை மீறியதற்காக, 2018-ம் ஆண்டு, 24,47,329 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றின் மூலம் அபராதமாகக் 27,20,88,430 ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 7 லட்சத்து 88 ஆயிரத்து 563 வழக்குகள் பதியப்பட்டு, அவற்றின் மூலம் 8,65,28,350 ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல்

அதேபோல், சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்களின் 'பைக் ரேஸ்' நள்ளிரவுக்குப் பின்னும் நடந்துகொண்டிருந்தது. இதில் பலர் உயிரிழந்தாலும், பைக் ரேஸ் தொடர்ந்துகொண்டிருந்தது. இதையடுத்து, 130 போலீஸார் இணைந்து 29 இடங்களில் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்தினார்கள். பைக் ரேஸில் ஈடுபட்ட 188 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 685 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தாறுமாறாக வாகனம் ஓட்டியவர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் என 286 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்து போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக உரிமம் ரத்துசெய்யப்பட்ட நபர்கள், அதிகபட்சமாக ஆறு மாதம் வரை வாகனங்களை ஓட்டமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை

போக்குவரத்து போலீஸார், சாலைவிதிகளை மீறும், அதாவது தலைக்கவசம் அணியாமல் பயணம் மேற்கொள்வோர், சிக்னலை மீறிச் செல்வோர், இரண்டு பேருக்கு மேல் பைக்கில் பயணம் செய்வோர் எனப் போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் வாகனப் பதிவு எண்களை தங்கள் டைரியில் போலீஸார் பதிவு செய்ததன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் வீடுகளுக்கே சம்மன் அனுப்பப்பட்டது. அந்தவகையில் 14,072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2018 மற்றும் 2019 மே மாதம் வரை 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடைய 940 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீஸார் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம்  ரத்து செய்யும் காவல்துறை

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், ''போக்குவரத்து விதிகளை மீறும்போது, முதல்முறை எச்சரித்து அனுப்புகிறோம். மீண்டும், மீண்டும் அதே தவற்றை செய்யும்போதுதான் நடவடிக்கை எடுக்கிறோம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனையாகத்தான். சாலைவிதிகளை சற்றும் பொருட்படுத்தாமல் மிக மோசமான முறையில் மீறுபவர்களுக்கே, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாநகரச் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் உதவியோடு குற்றங்கள் தடுக்கப்படுவதுபோல், விரைவில் போக்குவரத்து நெரிசலும் குறையும்!'' என்றார். 


டிரெண்டிங் @ விகடன்