"மாணவர்கள் இருக்கிறார்கள்; ஆசிரியர்கள் இல்லை" மலைப்பகுதி பள்ளியின் அவலம்! | No teacher for this tribal area school... What is the solution?

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/06/2019)

கடைசி தொடர்பு:20:40 (06/06/2019)

"மாணவர்கள் இருக்கிறார்கள்; ஆசிரியர்கள் இல்லை" மலைப்பகுதி பள்ளியின் அவலம்!

"மலைவாழ் மக்கள் எதற்காக அவசியம் படிக்க வேண்டும் என நினைத்தோமோ அது நடக்காது போலிருக்கிறது" என்ற விரக்தியுடன் பேசத் தொடங்கினார் 'சுடர்' நடராஜன். ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளை நடத்தும் சுடர் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்தவர். இவர் முயற்சியால் முதன்முறையாகக் கல்வி பெற்ற மலைவாழ் மக்கள் குழந்தைகள் பலர். நடுநிலை வகுப்புகள் வரை கல்வி பெறப்பட்ட குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுகையில் எதிர்கொள்ளும் சிக்கலைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

நடராஜன் மலைப் பகுதி"பள்ளிக்கூடம் என்று பொதுவாகச் சொன்னாலும், மலைப் பகுதிக்கும் சமவெளிப் பகுதிக்கும் ஏராளமான மாறுபாடுகள் இருக்கின்றன. மலைப்பகுதியில் சாலைகள் சீராக இருக்காது; போக்குவரத்து வசதிகள் அதிகம் இருக்காது; சில இடங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலைமையும் உண்டு. முதன்முறையாகத் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அதனால், கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டியதும் அவசியமாகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் குழந்தை வசிக்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், மலைப்பகுதிகளில் இது நடைமுறையில் இல்லை. அதனால்தான் குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. 

இப்படி நாங்கள் எட்டாம் வகுப்பு வரை கல்வி அளித்து அனுப்பும் மாணவர்கள் குழந்தைத் தொழிலாளியாகிவிடாதிருக்க, தொடர்ச்சியாகப் படிக்க வேண்டும். அதனால்தான், கொங்காடை எஸ்.டி காலனியின் நடுநிலைப் பள்ளியைத் தொடர்ந்து வலியுறுத்தி, 2017-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக்க வைத்தோம். (155 பள்ளிகளில் 5 பள்ளிகளில் பழங்குடி நலப் பள்ளிகள்)  ஆனால், அந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்கை நடைபெறவில்லை. அதனால், அடுத்த கல்வி ஆண்டான 2018 -19-ல் 49 மாணவர்களைச் சேர்க்க வைத்தோம். அந்தளவுக்கு அந்தப் பகுதியில் தேவை இருக்கிறது. ஆனால், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. காலாண்டுத் தேர்வுக்குள் ஆசிரியர்கள் வருவார்கள் எனக் காத்திருந்தோம். அடுத்து அரையாண்டு, முழு ஆண்டு எனக் காத்திருந்ததது வீண்தான் என்று புரிந்தது. இதனால், 49 மாணவர்களில் 22 பேர் பள்ளியைவிட்டு நின்றுவிட்டனர். இவர்கள் குழந்தைத் தொழிலாளியாகத்தான் மாறியிருக்கிறார்கள். பெண்களுக்கு குழந்தைத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படலாம். இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்றுதான் மலைவாழ் மக்களுக்குக் கல்வி அவசியம் என நினைத்துச் செயல்பட்டோம். ஆனால், அது நிறைவேறாதுபோல!" என்கிறார். 

மலைப்பகுதி

"எதனால் இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை?" என அவரிடம் கேட்டதற்கு, "இந்தப் பள்ளி பழங்குடியின நலத்துறையின் கீழ் வருகிறது. சிறிது தூரத்தில் உள்ள ஒரு பள்ளியும் இத்தோடுதான் உயர்நிலைப் பள்ளியாக்கப்பட்டது. அதில், ஆசிரியர்கள் நியமனமும் பாடங்களும் முறையாக நடக்கின்றன. காரணம், அது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருவதே. ஆனால், இங்கு நடுநிலை வகுப்புகள் வரை இருக்க வேண்டிய 10 ஆசிரியர்களுக்குப் பதில் மூவர்தான் இருக்கின்றனர். இது பழங்குடி நலத்துறையின் கீழ் வருவதால் இந்த நிலைமை" என்கிறார் ஆதங்கத்துடன். 

கொங்காடை எஸ்.டி காலனி பள்ளியின் நிலவரத்தைக் கூறி, அதற்கு என்ன தீர்வு என, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரிட்டோவிடம் கேட்டோம். "இந்தப் பள்ளி பற்றி என் கவனத்துக்கும் வந்தது. தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களை டெபுடேஷனாக அங்கு செல்ல சொல்லியிருக்கிறேன். ஆதிதிராவிட, பழங்குடி நலத்துறை ஒன்றாக இருந்தது இப்போது பழங்குடி நலத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் தாமதமாகிறது. பல ஆசிரியர்கள் மலைப்பகுதிகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை வற்புறுத்தி அனுப்பும்போது நீதிமன்றம் செல்வது உட்பட சில சிக்கல்கள் இருந்தன. அவற்றைச் சரி செய்து இந்த ஆண்டு போதுமான ஆசிரியர்கள் பணிபுரிவார்கள்" என்றார். 

கல்வி என்பது கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பது முக்கியம். 


டிரெண்டிங் @ விகடன்