`தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யலாம்?'' - ஆலோசனை நடத்திய பி.ஜே.பி மேலிடம்! | BJP Leaders meeting to discuss about election loss

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (06/06/2019)

கடைசி தொடர்பு:19:45 (06/06/2019)

`தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யலாம்?'' - ஆலோசனை நடத்திய பி.ஜே.பி மேலிடம்!

டந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழகத்திலோ பி.ஜே.பி நிலையே வேறுவிதமாக உள்ளது. தமிழகத்தில் தாமரை மலர என்ன செய்யலாம் என ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தியிருக்கிறது பி.ஜே.பி தலைமை.

தாமரை மலர கூட்டம்

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வை மிரட்டி கூட்டணி வைத்ததாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தனர். அதில் பி.ஜே.பி-க்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒன்றிலும் அவர்கள் வெல்லவில்லை. அதேபோல், அ.தி.மு.க-வும் தேனி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. ``உன்னால் நான் கெட்டேன்; என்னால் நீ கெட்டாய்'' என்று தோல்விக்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பொதுவெளியில், இன்னும் கூட்டணி பாசத்தோடே பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத் தோல்விக்கான காரணங்களை ஆராய, பி.ஜே.பி-யின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் சி.டி.ராவ் ஆகியோர் டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தனர்.

பிஜேபி

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்,  ``தமிழகத்தில் பி.ஜே.பி சந்தித்த தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அடுத்த தேர்தலுக்கு சரிசெய்ய வேண்டும் என்று மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்படியாவது தாமரையை தமிழகத்தில் மலர வைக்க வேண்டும் என்று மத்திய தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மோடி எதிர்ப்பு பிரசாரம் எதிர்க்கட்சிகளாலும், பல்வேறு அமைப்புகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது என்பதை மாநிலத் தலைமை எடுத்துரைத்தது. அதைப் பொறுமையாக கேட்டுக்கொண்டார் முரளிதர ராவ். அதேசமயம் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் அதிகரித்திருப்பதையும் சரிசெய்ய வேண்டும்'' என்று மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.