`தமிழகத்தில் தி.மு.கதான் இரட்டை வேடம் போடுகிறது!' - கடம்பூர் ராஜு | Minister kadambur raju slams Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (06/06/2019)

`தமிழகத்தில் தி.மு.கதான் இரட்டை வேடம் போடுகிறது!' - கடம்பூர் ராஜு

``மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்ப் பிரசாரம் செய்ததுபோல மொழிப் பிரச்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுவது பித்தலாட்ட அரசியலில் உச்சக்கட்டம்.” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``தமிழ்மொழி தொன்மையான மொழி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 5 ஆண்டுக்காலம் மத்திய அரசின் திட்டங்களை ஒதுக்கி, மறைத்து மக்களிடையே பொய்ப் பிரசாரத்தை எதிர்க்கட்சியினர் உண்டாக்கினார்களோ, தற்போது மொழிப் பிரச்சினையிலும் அதைப்போல தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதில், குறிப்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுவதுதான் பித்தலாட்ட அரசியலின் உச்சக்கட்டம். தமிழ் செம்மொழி என்று சொல்லி தி.முக., தமிழை வளர்க்கவில்லை. அதற்குப் பதிலாக கனிமொழியைத்தான் வளர்த்தார்கள்.

தி.மு.க ஆட்சியில் பெயருக்காகவும், பிழைப்புக்காகவும், அரசியலுக்காகவும்தான் தமிழைப் பயன்படுத்தினார்களே தவிர, சொல்லும்படியாக தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.கதான் உறுதியாக உள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். மொழியிலும் சரி, மக்களை ஏமாற்றுவதிலும் சரி, தமிழகத்தில் தி.மு.கதான் இரட்டை வேடம் போடுகிறது. அவர்களின் குடும்பத்துக்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று என்று தமிழினத்தை ஏமாற்றி வரும் தி.மு.க-வின் அரசியல் மக்களிடம் எடுபடாது.

நீட் தேர்வுக்காக இறுதிவரை போராடிய மாநிலம் தமிழகம்தான். இதற்கென தனியாக தமிழகத்தில்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்களில் 49 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இன்றும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையிலிருந்து தமிழக அரசு மாறுபடவில்லை. ஆனால், அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்பதால் வேறு வழியில்லாமல் உள்ளது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க