"நீங்கள் ட்விட்டரில் வந்ததால்தான் இந்தப் பிரச்னை" - மும்மொழி கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் | Chief Minister Edappadi Palanisamy explains over three language policy

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (07/06/2019)

கடைசி தொடர்பு:07:15 (07/06/2019)

"நீங்கள் ட்விட்டரில் வந்ததால்தான் இந்தப் பிரச்னை" - மும்மொழி கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர்

டெல்லி, மும்பை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் தமிழ் பேசுகின்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர். தமிழ் மக்கள், தம் குழந்தைகளுக்குத் தமிழிலே பயிற்றுவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.

மும்மொழிக் கல்வி தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பருவமழை பொய்த்ததால் பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருக்கின்றதோ அந்தப் பகுதிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அந்தப் பகுதி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 'காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமையும். நான் பிரதமராக வருவேன், அப்படி வருகின்ற காலகட்டத்திலே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும்' என்ற செய்தியைச் சொன்னார். அதைக் கேட்பதற்கு தமிழகத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சிகள் யாரும் துணியவில்லை. அம்மா இருந்தபோது, அ.தி.மு.க அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டால் அதிக வாக்குகள் கிடைக்கும், இந்தத் தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி போக எஞ்சிய தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். ஆகவேதான் வாக்குகள் குறைந்திருக்கின்றதே ஒழிய, எங்கள் வாக்கு குறையவில்லை. எதிர்க்கட்சியினர் நடைமுறைப்படுத்த முடியாத அறிவிப்பையெல்லாம் கொடுத்தார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது சொன்னேன்? ட்விட்டரில், உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் வந்ததனால்தான் எனக்கு இந்தப் பிரச்னையே வந்தது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலே நான் கலந்துகொண்டபோது, அங்கே இருக்கின்ற நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்து, 'எங்களுடைய குழந்தைகள் எல்லாம் தமிழ் கல்வி பயின்றுவருகின்றனர். எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலே எட்டாம் வகுப்பு ஆசிரியர் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டார், பாதிக்கப்படுகிறது. இதேபோல, பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற, தமிழ் மொழி பேசுகின்ற தமிழ் மக்கள், பல ஆண்டு காலமாக வசித்துவருகிறார்கள். அந்தப் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எல்லாம், அவர்களுடைய குழந்தைகளைத் தமிழ்க் கல்வி பயிற்றுவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும், தமிழ் விருப்பப்பாடமாக நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்கள். அது, நீங்கள் வைத்த கோரிக்கை, அதையே பெரிதுபடுத்துகின்றீர்கள்.

டெல்லி, மும்பை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் தமிழ் பேசுகின்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர். தமிழ் மக்கள், தம் குழந்தைகளுக்குத் தமிழிலே பயிற்றுவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். எனவே, விருப்பப்பாடமாக அதை உருவாக்கித் தரவேண்டுமென்றுதான் பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன். உடனே முதல்வர் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரிக்கிறாரா... என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. 'எங்கள் ஆட்சி இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றி நடத்தும், அதில் உறுதியாக இருக்கின்றோம்' என்று துணை முதல்வர், அமைச்சர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்காக நான் ட்விட்டரில் சொன்ன கருத்தைத் திருத்தி, இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். ஏழு பேர் விடுதலை செய்வதற்கு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். இதைக் கேட்பதற்கு தி.மு.க-வுக்கு தகுதியில்லை" என்றார்.