``ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலினுக்கு துணை நிற்போம்" - கே.எஸ்.அழகிரி | KS Azhagiri says that we will stand in favor of Stalin to dissolve the tn govt regime

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (07/06/2019)

கடைசி தொடர்பு:07:45 (07/06/2019)

``ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலினுக்கு துணை நிற்போம்" - கே.எஸ்.அழகிரி

'தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்போம்' என்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.


கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகியான திருச்சி சு.ப.சோமு என்பவரின் இல்லத் திருமண விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். முன்னாள் மேயர் சுஜாதா, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான ஜவகர், கலை ஆகியோரும் கலந்துகொண்டனர். 

திருமண விழாவில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளபோது, மூன்றாவது மொழியைத் திணிக்கக்கூடாது. தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதற்காக, அமைச்சர் செங்கோட்டையனைப் பாராட்டுகிறேன். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது ட்விட்டரில் தமிழ்மொழியை மற்ற மாநிலங்களில் விருப்ப மொழியாகப் பயில வழிவகை செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு, மத்திய அரசின் மொழிக் கொள்கையைத் தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரோ என்கிற அச்சத்தை ஏற்படுகிறது.

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதால், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எந்த மொழியும் திணிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கஸ்தூரிரங்கன் அறிக்கையின் முதல் பாராவில், இந்தி கட்டாயமாகக் கற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராகத் தென் தமிழகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததன் விளைவாக, சில வரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்தியை விருப்ப மொழியாகப்  பயிலலாம் எனக் கூறியுள்ளார்களே தவிர, அந்த அறிக்கையில் உள்ளபடி இந்தி கட்டாயம் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த அறிக்கையின்படி, ஒரு மாணவர் மூன்றாவது மொழியாக இந்தி படிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தி படிப்பதை நாங்கள் தவறென்று கூறவில்லை. ஆனால், கட்டாயப்படுத்துவதைத்தான் எதிர்கிறோம். இந்தி பேசாத மக்கள் இந்தியை ஆட்சி மொழியாக விரும்பாதவரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற முடிவை எடுத்தார் நேரு. அதன்பின் பிரதமரான இந்திரா காந்தி அம்மையார், சட்ட பாதுகாப்பு வழங்கினார். இந்தி திணிப்பு என்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது. ஒருவகை கலாச்சார படையெடுப்பு.

கே.எஸ்.அழகிரி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இணைந்து பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றோம். அதே கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். தி.மு.க கூட்டணியுடன் அதே நிலைப்பாட்டுடன் இணைந்திருப்போம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து முயன்றுவருகிறார். அவர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு 100 சதவிகிதம் காங்கிரஸ் துணை நிற்கும். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தோற்கவில்லை. தேர்தலில் இளங்கோவன் தோல்வியடைய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள்தான் காரணம். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைமீது சந்தேகம் உள்ளது.

 தமிழகத்தில் செயல்படுத்தும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அறிவியல் அறிஞர்கள் கருத்து கேட்க வேண்டும். அந்தக் கருத்துப்படி பாதிப்பை ஏற்படுத்தும் எனில் அத்திட்டங்களை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்” என்றார்.