``20 வருஷம் போராடி, குளத்தை மீட்டோம்!" கோவைக் குடும்பத்தின் `ஆஹா’ கதை | These people helped to recover Coimbatore Senkulam

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:20 (07/06/2019)

``20 வருஷம் போராடி, குளத்தை மீட்டோம்!" கோவைக் குடும்பத்தின் `ஆஹா’ கதை

20 ஆண்டுகளாக செங்குளத்துக்குத் தண்ணீர் வரவில்லை. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செங்குளம் நிறைந்தது.  இதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதி பொதுமக்கள் தான். தள்ளாத வயதிலும், தளராத நம்பிக்கையுடன் பல முதியவர்கள் செங்குளத்தை மீட்க முக்கிய பங்காற்றியிருக்கின்றனர்.

``20 வருஷம் போராடி, குளத்தை மீட்டோம்!

ண்ணீருக்காக தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. பராமரிக்கப்படாத நீர் நிலைகள், பொய்த்துப் போன பருவமழை போன்ற காரணங்களால் கடும் வறட்சி நிலவி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளாகவும், காய்ந்து போன புற்களாகவும் காட்சியளிக்கின்றன நீர்நிலைகள். கானல் நீர் தெரியும் அளவுக்குக் கூட, தண்ணீரைப் பார்க்க முடியவில்லை. குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கவேண்டிய சூழல்தான் பல இடங்களிலும் காணமுடிகிறது. 10 நாள்கள்...,15 நாள்கள்..., ஒரு மாதம்... என்று குடிநீர் வருவதற்கான கால இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம், நிலத்தடி நீர் மட்டமும் வேகமாகக் குறைந்துவருகிறது. 

குளம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் இருக்கிறது செங்குளம். 160 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் செங்குளம் முன்பு தூய்மையான நீர்நிலையாக இருந்துள்ளது. விவசாயத்துக்கு நேரடிப் பாசனமாகவும் இருந்தது. ஆனால், ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீர் கலப்பு போன்ற காரணங்களால் செங்குளம் கோவையின் அறிவிக்கப்படாத குப்பைக் கிடங்காக மாறிவிட்டது. இதையடுத்து, இனியும் இந்த அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை" என்று பொதுமக்கள் செங்குளத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினர். மனிதத் தவறுகளால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செங்குளத்துக்குத் தண்ணீர் வரவில்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும் செங்குளத்தில் களப்பணி செய்த பொதுமக்களின் முயற்சியால், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செங்குளம் நிறைந்தது. 

இதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதி பொதுமக்கள்தான். தள்ளாத வயதிலும், தளராத நம்பிக்கையுடன் பல முதியவர்கள் செங்குளத்தை மீட்க முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். பலர் தங்களது குடும்பங்களுடன் வந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, வறண்டு போன செங்குளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், ராமகிருஷ்ணன் என்பவரது குடும்பம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். கொளுத்தும் வெயிலில் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி ராஜேஷ்வரியும், மதுபாட்டில்கள் முதல் பிளாஸ்டிக் கழிவு வரை கண்ணில்பட்ட அனைத்துக் கழிவுகளையும் அகற்றிக்கொண்டிருந்தனர். களப்பணி முடிந்தவுடன் நம்மிடம் பேசினார்கள். 

களப்பணிக்கு முன்பு செங்குளம்

களப்பணிக்கு முன்பு செங்குளம்

``எனக்கு தற்போது வயது 53. இந்தக் குளத்தை நான் சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன். என்னுடைய அம்மா, உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் குளிப்பது, துவைப்பது அனைத்தும் இங்குதான். துவைக்கும் கல்லைப் பிடிப்பதற்காக, வரிசையில் நின்ற காலம் எல்லாம் இருக்கிறது. சந்தோஷமாக இங்கு விளையாடுவோம். அவ்வளவு அழகாகக் கழிந்தன அந்த நாள்கள். குப்பைகள் அதிகரிக்கத் தொடங்கியுவுடன், தண்ணீர் கறுப்பு நிறத்தில் பார்க்கவே முடியாத நிலையில் வரத்தொடங்கியது. 2016-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இந்தக் குளத்தை மீட்டெடுப்பது என்று முடிவெடுத்தோம். அனைவரும் வந்து பார்த்தபோது மலைத்துப் போய்விட்டோம். குப்பைகளும், புதர்களும் காலடி எடுத்து வைக்க முடியாத சூழ்நிலையில் இருந்தது. முதலில் மூன்று பேர் வந்தோம். படிப்படியாக உறவினர்களும், நண்பர்களும் களப்பணியில் ஈடுபட்டனர்.

களப்பணியில் இளைஞர்கள்

80 வயது முதியவர்கள், குழந்தைகள் என்று பலரும் ஆர்வத்துடன் வரத்தொடங்கினர். ஒவ்வொருவரும், தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினார்கள். பிறகு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். அரசு தரப்பிலும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதன் மூலம், கடந்த ஆண்டு செங்குளத்துக்குத் தண்ணீர் வந்தது. அப்போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. சாக்கடையைக் கடந்துதான் இந்தத் தண்ணீர் வருகிறது என்று தெரியும். ஆனால், சந்தோஷ மிகுதியால், நாங்களே இங்கு குளித்தோம். எனது அம்மா, மகள் அனைவரும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு நீர்நிலை இருந்தது என்பதைக் கொண்டுசென்று, இதைப் பாதுகாப்பதற்காகத்தான் இவ்வளவு முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்று முடித்தார் ராமகிருஷ்ணன்.

களப்பணியில் முதியவர்கள்

ராமகிருஷ்ணனின் மனைவி ராஜேஷ்வரி, ``சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என்று அனைத்து விஷயங்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் முதலில் நாம் குடிப்பதும் தண்ணீர்தான். தண்ணீர் இல்லாவிடின் எதுவும் நடக்காது. எனவே, நீர்நிலைகளைக் காப்பது மிகவும் அவசியம். குளங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். எல்லா விஷயத்துக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நம் வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, நம் குளத்தையும் அப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். 

ராஜேஷ்வரி

யாரையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. நமது குழாயில் தண்ணீர் வரவேண்டுமென்றால், நம் குளத்தில் தண்ணீர் இருக்கவேண்டும் என்பதை உணர வேண்டும். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாள்கள் முழுவதும் குளத்தில் எங்களின் பொழுது கழியும். குப்பைபோடும் அனைவரிடமும், `போடாதீர்கள்' என்று சொல்வோம். எவ்வளவு சொல்லியும் சிலர் கேட்க மாட்டார்கள். சரி, `உங்களால் எவ்வளவு முடிகிறதோ போடுங்கள். நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். தனிமனிதன் உணரும் வரை, எந்த மாற்றமும் வராது. எவ்வளவு விழிப்புணர்வு செய்தும் பிரயோஜனம் இல்லை" என்று ஆதங்கத்துடன் முடித்தார்.

களப்பணியில் முதியவர்கள்

பொது மக்களாலேயே இவ்வளவு மாற்றம் வரமுடிகிறபோது, அரசு நினைத்தால் நீர்நிலைகளை எளிதில் மீட்க முடியும்.  


டிரெண்டிங் @ விகடன்