`என் தங்கையிடம் பழகாதே!'- நாகர்கோவிலில் அகதியை எரித்துக்கொன்ற வாலிபர்கள் | Man killed in love issue; police arrested three persons

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (07/06/2019)

கடைசி தொடர்பு:11:27 (07/06/2019)

`என் தங்கையிடம் பழகாதே!'- நாகர்கோவிலில் அகதியை எரித்துக்கொன்ற வாலிபர்கள்

நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டில், இலங்கை அகதியை எரித்துக் கொன்ற மற்றொரு இலங்கை அகதி உட்பட, மூன்றுபேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை அகதி

நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டுப் பகுதியில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டாறு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரெசி (34) என்பவர்தான் எரித்துக் கொல்லப்பட்டவர் எனத் தெரிய வந்தது. ரெசி 2004-ம் ஆண்டு முதல் வள்ளியூரில் வசித்துவந்துள்ளார். இவர், ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம் அகதிகள் முகாமில் உள்ள பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட அகதி

`என் தங்கையிடம் பழகாதே' என்று பல முறை அந்தப் பெண்ணின் தம்பி கேதீஸ்வரன் கண்டித்துள்ளார். ஆனால், ரெசி தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வள்ளியூரில் வைத்து ரெசிக்கும் கேதீஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கேதீஸ்வரன், கத்தியால் ரெசியை குத்தியுள்ளார். பின்னர், கேதீஸ்வரன் (25) மற்றும் அவரது நண்பர்கள் பழனி என்ற கண்ணன், பைசல் ஆகியோர் காரில் ரெசியை தூக்கிப்போட்டு நாகர்கோவிலுக்குக் கொண்டுவந்துள்ளனர். பின்னர், கணிகமாணிக்கப்புரம் சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி ரெசியை எரித்துள்ளனர். இதையடுத்து, கோட்டாறு போலீஸார் இலங்கை அகதியான கேதீஸ்வரன், அவரது நண்பர்கள் பழனி என்ற கண்ணன், பைசல் ஆகியோரைக் கைதுசெய்தனர்.