அனுமதி பெறாத மறுவாழ்வு மையத்துக்கு ஐஎஸ்ஓ சான்று?- அதிர்ச்சியில் திருச்சி | Trichy de addiction centre has ISO certificate

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:12:26 (07/06/2019)

அனுமதி பெறாத மறுவாழ்வு மையத்துக்கு ஐஎஸ்ஓ சான்று?- அதிர்ச்சியில் திருச்சி

மறுவாழ்வு சிகிச்சைக்கு வந்த தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சையில், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த மதுபோதை மறுவாழ்வு மையம், ஐஎஸ்ஓ தரச் சான்று வாங்கியிருப்பதுதான் பலரையும் அதிரவைத்துள்ளது.

மறுவாழ்வு மையத்தால் உயிரிந்த தமிழ்ச்செல்வன்

கடந்த 1-ம் தேதி, திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அன்பழகன் தெருவில் இயங்கிவந்த லைஃப் கேர் மது போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்கிற  தலைமைக் காவலர், மர்மமான முறையில் இறந்தார்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி கே.கே நகர் போலீஸார் மறுவாழ்வு மையத்தை ஆய்வுசெய்தனர். அப்போது, சிகிச்சைக்கு வந்த 26பேர் இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்திருந்த நிலையில் மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன காவலர் தமிழ்ச்செல்வனின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், சென்னையில் உள்ள மனநல இயக்ககத்தின் உத்தரவின் பேரில், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை தலைவர் நிரஞ்சனாதேவி மற்றும் மருத்துவர் முரளி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழு, சம்பந்தப்பட்ட மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

அந்த ஆய்வில், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், மிருகங்களைவிட மிக மோசமாக நடத்தியதும், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்களை அடைத்துவைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், தகுதி இல்லாமலும் பயிற்சி இல்லாமலும்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும், அந்த மையத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், அந்த மையமே அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. அதனையடுத்து, மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த லைஃப் கேர் போதை மறுவாழ்வு மையத்தை, நேற்றிரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் சம்சாத் பேகம் மற்றும் வட்டாட்சியர் சண்முகவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர்,  பூட்டி சீல் வைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள்

 போலீஸார், மறுவாழ்வு மையத்தில் பணியாற்றிய பிரகாஷ் மற்றும் ராஜா உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்நிலையில்,  மறுவாழ்வு மையத்தை நடத்திவந்த அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தலைமறைவாகி உள்ளதால், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசு, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அந்த மையங்களில் பல்வேறு நபர்கள் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தின் அனுமதியோடு, தமிழகத்தில் 152 இடங்களில் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இல்லாமல் மறுவாழ்வு சிகிச்சை மையம் நடத்துவது மிகப்பெரிய குற்றம். இதுகுறித்து அலுவலர்கள் மூலம் ஆய்வுசெய்து, அனுமதி இல்லாத மறுவாழ்வு மையங்களின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த மையங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அங்கீகாரம் இல்லாத 24 மையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தற்போது அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த திருச்சி மறுவாழ்வு மையத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் மறுவாழ்வு சிகிச்சை மையங்களை நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்மையத்தை நடத்திவந்த மணிவண்ணன், அந்த மையம் ஐஎஸ்ஓ 9001-2008 தரச்சான்று பெற்றிருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. நோயாளிகளை இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்தியதுடன், அனுமதியில்லாமல் செயல்பட்ட மறுவாழ்வு மையம் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றிருப்பது உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

செய்யுமா அரசு...