`பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தானே அரசு இருக்கிறது!'- அமைச்சர் எம்.சி.சம்பத் | we assure women safety about night shifts in 24hrs shops open says minister sampath

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:00 (07/06/2019)

`பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தானே அரசு இருக்கிறது!'- அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை மையப்படுத்தி, தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை நடத்துவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பேசினோம்.

கடை

`வெளிநாடுகளில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதுபோல நம் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த முடியும். ஐ.டி உட்பட பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்களில் வேலை செய்யும் பலரும் பல்வேறு ஷிஃப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான உணவு மற்றும் பிற தேவைகளுக்குச் சிறு வணிகர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கத்தில்தான் 24 மணிநேரமும் கடைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். 

எம் சி சம்பத்

இதில் எந்தக் கட்டாய நடைமுறையும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் இரவு நேரத்திலும் கடைகளை நடத்தலாம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். குறிப்பாக, இந்த நடைமுறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுகின்றன. அதை உறுதிசெய்யத்தானே அரசு இருக்கிறது. வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்கள் மற்றும் பெண் நுகர்வோர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். அதற்குக் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுவார்கள். இந்த விவகாரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிக் குழுவை ஏற்படுத்தும் யோசனைகளும் இருக்கிறது. இதுதொடர்பாக நானும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தினரும் வரும் திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசனை நடத்துவோம். அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு, விரைவில் விரிவான தகவல்கள் வெளியாகும்" என்றார்.