``ஷிவ் நாடார் இங்க படிச்சதே எங்களுக்குத் தெரியாது!''- வியப்பிலிருந்து மீளாத தலைமை ஆசிரியர் | we did not know shiv nadar is our old student says madurai corporation school HM

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:40 (07/06/2019)

``ஷிவ் நாடார் இங்க படிச்சதே எங்களுக்குத் தெரியாது!''- வியப்பிலிருந்து மீளாத தலைமை ஆசிரியர்

ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார், தான் படித்த அரசுப் பள்ளியை 15 கோடி ரூபாயில் நவீனமாக்கி கட்டிக் கொடுத்துள்ளார். மதுரை அரசுப் பள்ளியில் 1953-ம் ஆண்டு படித்த ஷிவ் நாடார் அளித்த நன்கொடையால், மதுரை இளங்கோ மாநகராட்சிப் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலிக்கிறது.

ஷிவ் நாடார் அரசுப் பள்ளிக்கு கட்டி கொடுத்த கட்டடம்

ஸ்மார்ட் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப், அழகிய பூங்கா, நவீனக் கழிவறைகள், குடிநீர் பிளான்ட், கூடைப்பந்து மைதானம் எனத் தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும்விதமாக இளங்கோ பள்ளி மாறியுள்ளது. இதுவரை மாணவர்கள் மட்டுமே படித்துவந்த இளங்கோ அரசுப் பள்ளியில் இந்த ஆண்டுமுதல் 11- ம் வகுப்பில் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாகக்  கல்வி தரத்திலும் இளங்கோ பள்ளியை மாற்றுவதற்கு ஆசிரியர்களுக்குத் தனியாகப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. `சேதமடைந்த கட்டடங்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலை, இடிந்துபோன கழிவறைகளுடன் இருந்த இளங்கோ பள்ளி, நவீன வசதிகளுக்கு மாறியதால் ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். 

மதுரை அரசுப் பள்ளி

இந்த மாற்றம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம், ``கடந்த 10 ஆண்டுகளாக நான்தான் இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருக்கிறேன். 2011-ம் ஆண்டு எங்கள் பள்ளிக்கு ஒரு டீம் திடீரென வந்தது. `ஹெச்.சி.எல் அதிபர் ஷிவ் நாடார் அனுப்பிவைத்ததாகச் சொன்னார்கள். பிறகு, அவர் இங்கேதான் படித்தார் எனச் சொன்னபோது, எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அதுவரையில், ஷிவ் நாடார் இங்கேதான் படித்தார் என்ற விஷயம் எங்கள் யாருக்குமே தெரியாது. உடனே ரெக்கார்டுகளை எடுத்து செக் செய்தேன். 1953 மற்றும் 54-ம் ஆண்டுகளில் இங்கே படித்தது தெரிந்தது. அவரின் தம்பி சுப்ரமணியமும் இங்கே படித்துள்ளார். ஹெச்.சி.எல்-லில் இருந்து வந்த டீம், `உங்க பள்ளிக்கு ஏதாவது வேண்டுமா என சார் கேட்கச் சொன்னார்' என்றனர். நான் பல விஷயங்களை அவர்களிடம் சொன்னேன்.

ஒருநாள் ஷிவ் நாடாரே எங்கள் பள்ளிக்கு வந்தார். அவர் படித்ததற்கான பள்ளிப் பதிவுகளை எடுத்துக் காட்டினேன். அதைப்  பார்த்து ஆசையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எவ்வளவு பெரிய மனிதர் இப்படி குழந்தைத்தனமாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறாரே’ என வியந்துபோனேன். பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். பள்ளியின் நிலையைக் கண்டு கலங்கியவர் `நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று என்னிடம் சொன்னார்.

மதுரை இளங்கோ அரசுப்பள்ளி

ஷிவ் நாடார் இங்கே வந்த சமயத்தில் எங்கள் பள்ளி கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. சாம்பியன் கோப்பையை ஷிவ் நாடார் கையால் மாணவர்களுக்குக் கொடுக்கவைத்தோம். மாணவர்களிடத்தில் 45 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அன்று சுமார் 2 மணி நேரம் எங்களுடனேயே இருந்தார். 15 கோடி ரூபாய் பள்ளி நிர்வாகத்துக்காக ஒதுக்க, மளமளவென வேலைகள் துரிதமாக நடந்தன. பள்ளியில் நடைபெறும் பணிகளை ஹெச்.சி.எல் நிறுவனத்திலிருந்து ஒரு குழுவினர் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். 2018- ம் ஆண்டு ஷிவ் நாடாரே நேரில் வந்து பணிகளைப் பார்த்தார். கான்ட்ராக்டர்களிடமும் பேசினார். கூடுதல் பணிகளுக்கும் உடனே நிதி ஒதுக்கினார். பள்ளிப் பராமரிப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எது உடைந்தாலும் உடனே மாற்றிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். பராமரிப்புப் பணிக்கு 15 பேர் கொண்ட குழு இருக்கிறது. 

அத்துடன், ஹெச்.சி.எல் சார்பில் திபேந்திரா என்பவரை நிரந்தரமாகவே இங்கே நியமித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் உள்ள குறைகளை அடையாளம் கண்டு, அவற்றை களைவது அவரின் வேலை. எங்களைப் போலவே அவரும் தினமும் பள்ளிக்கு வந்து பயிற்சி அளிக்கிறார். இன்னும் சில நாள்களில் பணிகள் முற்றிலும் முடிந்துவிடும். ஷிவ் நாடார் கரங்களால் பள்ளியைத் திறக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அவரிடம் தேதி கேட்டுள்ளேன். அவசியம் வருவதாகக் கூறியுள்ளார். ஷிவ் நாடார் போலவே மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவ முன் வந்தால், அரசுப் பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்’’ என்றார் மிகுந்த உற்சாகத்துடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க