17 ஆண்டுகளாக வீணான நீர்... ஒரே மழையில் குட்டையை நிரம்பவைத்த கோவை மக்கள்! | Coimbatore peoples restore this water body

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/06/2019)

கடைசி தொடர்பு:14:00 (07/06/2019)

17 ஆண்டுகளாக வீணான நீர்... ஒரே மழையில் குட்டையை நிரம்பவைத்த கோவை மக்கள்!

கோவையில், பொது மக்களின் முயற்சியால் கடந்த 17 ஆண்டுகளாக வீணாகிவந்த நீர், தற்போது சேமிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஊர் மக்கள்

தண்ணீர் பிரச்னை தமிழகம் முழுவதும் வாட்டிவதைத்துவருகிறது. பெரும்பாலான இடங்களில், நீர்நிலைகளைச் சரியாக பராமரிக்காததே வறட்சிக்கு முக்கியக் காரணம் என்ற புகார் உள்ளது. தமிழக அரசு கோட்டைவிட்ட நீர் மேலாண்மையைப் பொது மக்களும் இளைஞர்களும் கையில் எடுத்துள்ளனர். நீர்நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது, தூர் வாருவது போன்ற பணிகளில் அந்தந்தப் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

 கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில், வடுகபாளையம் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் இருந்த  ஒரு குட்டையின் கரை கடந்த 2002-ம் ஆண்டு உடைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த 17 ஆண்டுகளாக அங்கு வரும் தண்ணீர் ஒரு சொட்டுகூட நிற்காமல் அப்படியே வெளியேறிக்கொண்டிருந்தது. இதையடுத்து, கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் மற்றும் பொது மக்கள் இணைந்து, அந்தக் குட்டையில் தடுப்புச் சுவர் அமைத்து, நீரை தேக்குவதற்கான பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுவந்தனர். அவர்களின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த பலனாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில், ஆறு ஏக்கர் பரப்பளவைக்கொண்ட அந்தக் குட்டை முழுவதும் நிறைந்துவிட்டது.

தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் மக்கள்

கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் அமைப்பாளர் வெற்றிவேல், “கடந்த ஆறு ஆண்டுகளாகவே இதற்கான முயற்சியில் இறங்கியிருந்தோம். ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா களத்தில் வந்து ஆய்வுசெய்து, எங்களுக்கு போதுமான உதவிகளைச் செய்தார். குட்டையை ஆழப்படுத்தினோம். ஒரு பக்கத்தில் தடுப்புச் சுவர் அமைத்தோம். ஒரே இரவில் பெய்த மழையில், குட்டை முழுவதுமாக நிறைந்துவிட்டது. நிலத்தடி நீரை செரிவூட்டும் விதமாக, இந்தக் குட்டையில் ஐந்து ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளோம். இதனால், ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்துக்குச் செல்கிறது. கிட்டத்தட்ட ஆறு கிராம மக்கள் இதன்மூலம் பயனடைவார்கள்.

ஒரு மழைக்கே, சில இடங்களில் 15 அடி வரை நீர் தேங்கியிருக்கிறது. ஆனால், அடுத்த மழை பெய்தால், இங்கு நீர் தேங்குவதற்கு வழியில்லை. எனவே, இந்தக் குட்டையைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். குட்டையின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

மழை நீரால் நிரம்பிய குட்டை

மழை நீரால் நிரம்பிய குட்டை

இதுகுறித்து கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்க செயலாளர் செல்வராஜ், “ஒவ்வொரு இடத்திலும் இதுபோன்ற இளைஞர் குழுக்களை உருவாக்கி, நீர்நிலைகளைப் பாதுகாப்பது அவசியம். அரசிடமிருந்து எப்படி உதவிகளைப் பெறுவது என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசுக்கும் இளைஞர்களுக்குமான பாலமாக இருக்க வேண்டும். அடுத்த  20 ஆண்டுகளில், தமிழகம் மிகக் கடுமையான வறட்சியைச் சந்திக்க இருக்கிறது. அதற்குள், நாம் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுப்பதன்மூலம் பிரச்னையை சமாளிக்க முடியும்” என்றார்.

தடுப்பு சுவர்

தடுப்பு சுவர்

பொதுமக்கள் தயாராகிவிட்டனர்… அரசு?