‘நேர்முகத் தேர்வு; போலி பணி நியமன ஆணை!’ -அரசு வேலை என்ற பெயரில் இன்ஜினீயரை ஏமாற்றிய ஆசிரியர் | The teacher who cheated the engineer was a government employee

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (07/06/2019)

கடைசி தொடர்பு:14:15 (07/06/2019)

‘நேர்முகத் தேர்வு; போலி பணி நியமன ஆணை!’ -அரசு வேலை என்ற பெயரில் இன்ஜினீயரை ஏமாற்றிய ஆசிரியர்

ஆம்பூர் அருகே, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, இன்ஜினீயரிடம் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

பணி நியமன ஆணைக்கான போலி கடிதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பார்த்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், கோவிந்தன் மகன் எழிலரசன். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். ஆனாலும், எழிலரசன் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். இதனையறிந்த ஆம்பூர் பெரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன் (46), தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏ.பி.ஆர்.ஓ) பணி வாங்கித் தருவதாகக் கூறி, 25 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். மூன்று தவணையாக 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆசிரியர் கமலக்கண்ணனிடம் எழிலரசன் கொடுத்திருக்கிறார். ஆசிரியரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், பணி நியமன ஆணையை பெற்றுக்கொள்வதற்கான அழைப்புக் கடிதம் என அடுத்தடுத்து போலி கடிதம் தயாரித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வழங்கியதைப் போன்று எழிலரசனிடம் கொடுத்திருக்கிறார். 

பணியில் சேருவதற்காக, எழிலரசன் சென்னை தலைமை செயலகத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு பணி நியமன ஆவணத்தைச் சரிபார்த்தபோது, போலியாகத் தயாரித்து தன்னை அந்த ஆசிரியர் ஏமாற்றியதை எழிலரசன் தெரிந்துகொண்டார். இதையடுத்து, பணத்தை திரும்பக் கேட்க, ஆசிரியரும் மூன்று காசோலைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றை வங்கியில் கொடுத்தபோது, பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. இதுபற்றி ஆம்பூர் தாலுகா போலீஸில் எழிலரசன் புகார் அளித்தார். ஆசிரியர் கமலக்கண்ணன் மற்றும் அவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த ராகேஷ் கண்ணா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மூன்றுபேரை போலீஸார் கைதுசெய்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கமலக்கண்ணன் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது சம்பந்தமாக ஆசிரியர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.