கோவை அரசு மருத்துவமனையில் தண்ணீர்ப் பிரச்னை; நோயாளிகள் கடும் பாதிப்பு! | Water supply problem in Coimbatore government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (07/06/2019)

கடைசி தொடர்பு:15:05 (07/06/2019)

கோவை அரசு மருத்துவமனையில் தண்ணீர்ப் பிரச்னை; நோயாளிகள் கடும் பாதிப்பு!

"இங்குள்ள கழிப்பறையைக்கூட பராமரிப்பு இல்லாமல்தான் வைத்திருக்கின்றனர். யாரிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. பணம் இருப்பவர்கள், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார்கள். நாங்கள் எங்கே செல்வோம்?"

கோவை அரசு மருத்துவமனையில் தண்ணீர்ப் பிரச்னை; நோயாளிகள் கடும் பாதிப்பு!

மிழகம் முழுவதும் தண்ணீர்ப் பிரச்னைதான் இப்போது கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம், தண்ணீருக்கான கண்ணீர்க் கதைகள் நிரம்பிக்கிடக்கின்றன. இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தண்ணீர்ப் பிரச்னை காரணமாக, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக நமக்குப் புகார் வந்தது. குறிப்பாக, சிறுநீரக நோயாளிகளுக்குச் செய்யப்படும் ரத்த சுத்திகரிப்பு (dialysis) கூடச் செய்யமுடியவில்லை என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நாம் கள ஆய்வு செய்தோம். இதயவியல், சிறுநீரக நோய்ப் பிரிவு என்று முக்கியமான வார்டுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டோம்.

சிறுநீரகவியல் துறை

கோவை அரசு மருத்துவமனையானது இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமல்லாமல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக இருக்கிறது. தினமும் சுமார் ஏழாயிரம் வெளிநோயாளிகளும், இரண்டாயிரம் உள்நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மக்களின் குடிநீர்த் தேவைக்காக மூன்று பல்க் இணைப்புகள், இரண்டு சாதாரண இணைப்புகள் என மொத்தம் ஐந்து குடிநீர் இணைப்புகள் இருக்கின்றன. அனைத்துக் கட்டடங்களிலும் குடிநீர் வசதி இருக்கிறது. உப்புத் தண்ணீருக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிநீரும் கிடைக்காமல், உப்புத் தண்ணீரும் கிடைக்காமல் நோயாளிகள், கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் பேசினோம், ``கோடைக்காலத்தில் மட்டுமல்ல; இங்கு எப்போதுமே தண்ணீர்ப் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அடிக்கடி மோட்டார் பழுதாகி பிரச்னை ஏற்பட்டுவிடும். பலமுறை தொடர்பு கொண்ட பிறகே, பராமரிப்பாளர்கள் வந்து சம்பிரதாயத்துக்காக, பழுதினைச் சரிசெய்துவிட்டுச் செல்வார்கள். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே அதே பிரச்னை மீண்டும் வந்துவிடும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் மரம் வெட்டினர். அப்போது, குடிநீர் இணைப்பில் பிரச்னை ஆகிவிட்டது. நாங்கள் குடிப்பதற்குகூடத் தண்ணீர் கிடைப்பதில்லை. நோயாளிகளுடன் உதவிக்கு இருப்போர் வெளியில் செல்லும்போது, தண்ணீர் கொண்டுவரச் சொல்வோம். குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கான உப்புத் தண்ணீரும் முன்புபோல வருவதில்லை. தேவையான இடங்களில் தண்ணீர் இருக்காது. அதே நேரத்தில், மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கான ஹாஸ்டலில் எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும்" என்றனர்.

கோவை அரசு மருத்துவமனை

சிறுநீரகவியல் வார்டுக்குச் சென்றோம். ரத்தம் சுத்திகரிப்பு செய்யவேண்டிய நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் வெளியில் அமர்ந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த நோயாளி ஒருவரிடம் பேசினோம், ``கடந்த சில வாரங்களாகவே சுத்திகரிப்பு செய்வதில் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் காலையிலேயே வந்த நான், ரத்தம் சுத்திகரிப்பு செய்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு ஆகிவிட்டது. கேட்டால், மோட்டார் பழுதாகிவிட்டதாகக் கூறுகின்றனர். எங்களுக்கு வேறு வழியும் இல்லை என்பதால் அமைதியாக இருக்கிறோம்" என்றார்.

மற்றொரு நோயாளியுடன் வந்திருந்த பெண்ணிடம் பேசினோம், ``காலையிலிருந்து காத்துகிட்டு இருக்கோம். இப்போதுவரை யாருக்கும் டோக்கன் கொடுக்கலை. (அப்போது நேரம் மதியம் 2 மணியைத் தொட்டுவிட்டது). `தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை...' என்று சொல்கின்றனர். நோயாளியை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்க முடியும்? இங்குள்ள கழிப்பறையைக்கூட பராமரிப்பு இல்லாமல்தான் வைத்திருக்கின்றனர். யாரிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. பணம் இருப்பவர்கள், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார்கள். நாங்கள் எங்கே செல்வோம்?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.

காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள்

சிறுநீரகவியல் வார்டில் பணியாற்றும் சிலரிடம் பேசினோம், ``தினமும் காலை 8 மணிக்கு ரத்தம் சுத்திகரிப்பைத் தொடங்கிவிடுவோம். ஒருநாளுக்கு 40 பேருக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்வோம். தற்போது, தண்ணீர்ப் பிரச்னையால் 30 பேருக்கு சுத்திகரிப்பு செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படும். எனவே, இருக்கும் தண்ணீரை வைத்து சமாளித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

அனைத்துக் கட்டடங்களிலும் தண்ணீர் வசதி இருந்தாலும், இயந்திரங்கள் பழுது காரணமாக பெரும்பாலான இயந்திரங்களில் தண்ணீர் வருவதில்லை. பகல் நேரத்தில், கேன்டீனுக்குச் சென்றும், வெளியில் ஹோட்டலுக்குச் சென்றும் தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்கின்றனர். இரவு நேரத்தில்தான் மக்களின்பாடு ரொம்ப திண்டாட்டம் ஆகி விடுகிறது. ``கர்ப்பிணிப் பெண்கள், தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இங்கு மூன்று சொட்டு தண்ணீருக்கே தவிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது" என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ரத்த சுத்திகரிப்பு நிலையம்

மருத்துவமனையின் தேவைக்கே, ஊழியர்கள் சிறிது தூரம் பயணித்து நோயாளிகளுக்கு உதவும் வாகனங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் கேட்டபோது, ``அப்படி ஒரு பிரச்னையே இல்லை..."என்று ஆரம்பித்தவர், ``மோட்டார் பழுது காரணமாக சிறுநீரகவியல் துறைக்குத் தண்ணீர் செல்வதில் பிரச்னை இருக்கிறது. மற்றபடி, ரத்தம் சுத்திகரிப்பு செய்வதில் தாமதம் ஏற்படவில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து வார்டுகளிலும் சென்று குடிநீர் உட்பட அனைத்து வசதிகள் தொடர்பாகவும் நான் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்னை குறித்து விசாரிக்கிறேன்" என்றார்.

வெளியே சென்று தண்ணீர் வாங்கி வரும் மக்கள்

ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்ல, அடிப்படை வசதிகளைச் செய்துத்தர வேண்டிய பொறுப்பு அரசு மருத்துவமனைக்கும், அதை நிர்வகிப்போருக்கும் உண்டு. அதிகாரிகள் இந்த நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்