போதையில் காரோடு மல்லுக்கட்டிய அரசு ஊழியர்கள்! - நடுரோட்டில் நடந்த வடிவேலின் தள்ளு...தள்ளு  | Drunken government staffs Creates traffic violence in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (07/06/2019)

கடைசி தொடர்பு:15:35 (07/06/2019)

போதையில் காரோடு மல்லுக்கட்டிய அரசு ஊழியர்கள்! - நடுரோட்டில் நடந்த வடிவேலின் தள்ளு...தள்ளு 

போதையில் அரசு ஊழியர்கள்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மத்திய அரசு அலுவலகத்துக்குச் சொந்தமான அம்பாஸ்டர் காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த டிரைவரும், பின்னால் அமர்ந்திருந்த அரசு ஊழியர்களும் போதையில் இருந்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை என்றனர் போலீஸார். 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள வேகத்தடையில் ஏற முடியாமல் வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் நடுரோட்டில் நின்றது. காரிலிருந்து இறங்கிய டிரைவர், அந்தப் பகுதியில் உள்ள மரத்தடியில் ஓய்வெடுத்தார். காருக்குள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். 

அம்பாஸ்டர் காரால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வேப்பேரி காவல் நிலைய போலீஸாரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரும் அங்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் டிரைவர் ஓடி வந்து காருக்குள் ஏறினார். காருக்குள் இருந்த இருவரும் நடிகர் வடிவேல் ஸ்டைலில் தள்ளு, தள்ளு என காரைத் தள்ளினர். 

 போதையில் அரசு ஊழியர்கள்

அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது இருவரும் போதையில் இருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் டிரைவர் காரில் வேகமாகப் புறப்பட்டார். அவரை போலீஸாரால் துரத்திப் பிடிக்கமுடியவில்லை. காரைத் தள்ளிக்கொண்டிருந்த இருவரைப் பிடித்து வேப்பேரி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் ராயபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, கே.கே.நகரைச் சேர்ந்த மணி எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தூர்தர்சன் அலுவலகத்தில் பணியாற்றிவருகின்றனர். காரை ஓட்டிவந்த டிரைவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மத்திய அரசு அலுவலகத்துக்குச் சொந்தமான அம்பாஸ்டர் கார், நடுவழியில் நிற்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சென்றபோது இருவர் அம்பாஸ்டர் காரை தள்ளிக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார். எங்களிடம் பிடிப்பட்ட ஆரோக்கியராஜ், மணி ஆகியோர் மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியர்களாக உள்ளனர். டிரைவர் மற்றும் ஆரோக்கியராஜ், மணி ஆகியோர் அரசு வாகனத்தில் வந்துள்ளனர்.

போதையில் அரசு ஊழியர்கள்

மதுபோதையில் அவர்கள் இருந்ததால் நடுவழியில் காரை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளனர். காருக்குள் இருந்தவர்கள் தலையை குனிந்தபடி இருந்தனர். அவர்களுக்கும் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காரை விட்டு இறங்கிய டிரைவர், தள்ளாடியபடி மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துள்ளார். எங்களைப் பார்த்ததும் டிரைவர் காரோடு தப்பி ஓடிவிட்டார். ஆரோக்கியராஜ், மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். டிரைவரைத் தேடிவருகிறோம். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

சட்டத்தின் முன் அனைவரும் சமம். கமிஷனர் அலுவலகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் செய்த செயலை சாதாரண மக்கள் செய்திருந்தால் அவர்களை படாதபாடுபடுத்தியிருப்பார்கள் போலீஸார். ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் என்பதால் காவல் துறையினரும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய டிரைவரை விரட்டிப்பிடிக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.  

போதையிலிருந்த மத்திய அரசு ஊழியர்களின் செயலால் போலீஸ் கமிஷனர் அலுவலக அமைந்துள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் வீடியோவாகவும் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடமும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.