`பசுமையின் தேவையை உணர வேண்டும்!' - மரங்களைக் காக்க புறப்பட்ட `ஆம்புலன்ஸ்' | Tree ambulance launched in Chennai, aims at planting uprooted trees

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:16:40 (07/06/2019)

`பசுமையின் தேவையை உணர வேண்டும்!' - மரங்களைக் காக்க புறப்பட்ட `ஆம்புலன்ஸ்'

`தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கப்போகிறது' என்று ஒருபுறம் பேச்சுகள் எழுந்து வருகிறது. தண்ணீர் பஞ்சத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மரங்கள் அழிப்பால் போதிய மழைப்பொழிவு இல்லாமல் போனது முக்கிய காரணம். இதேபோல் போதிய மரங்கள் இல்லாததால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுபாடும் அதிகரித்துக் காணப்படுகிறது. காற்று மாசுபாட்டின் அளவு என்பது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் மரங்கள் பட்டுப்போய்விடும் நிலைக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் மரங்களைக் காக்க `மர ஆம்புலன்ஸ்' என்ற சேவை ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்துல் ஹானி என்பவர்.

ஆம்புலன்ஸ் 

நவீன தொழில்நுட்ப உதவியுடன் பெரிய வேன் ஒன்றை இதற்காக ஆம்புலன்ஸாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைத்துள்ளார். வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களை மற்ற இடத்துக்குக் கொண்டு செல்வது, விதை பந்து விநியோகம், மரம் பயிரிடுதல் உள்ளிட்ட பல சேவைகளை இந்த ஆம்புலன்ஸ் மூலம் வழங்கப்படுகிறது. மரங்களைக் காப்பதற்காக முதற்கட்டமாகத் தமிழ்நாடு முழுவதும் இந்த ஆம்புலன்ஸ் செல்ல உள்ளது. தொடர்ந்து இந்தியா முழுவதும் இரண்டு மாதங்கள் செல்லும். 

அப்துல் ஹானி

இதுகுறித்துப் பேசியுள்ள அப்துல் ஹானி, ``பசுமையின் தேவையை மனிதர்கள் உணர வேண்டும். அதனால்தான் இந்த `மர ஆம்புலன்ஸ்' சேவை மூலம் சுற்றுச்சூழலில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். முதலில் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களை மற்ற இடத்துக்குக் கொண்டு செல்வதற்காகத்தான் இந்த யோசனை தோன்றியது. தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட புயல்களால் நிறைய மரங்கள் விழுந்துவிட்டது. இதனால் மரங்களைப் புதிதாக நடவும் இந்த ஆம்புலன்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நின்று பசுமை குறித்தும் தண்ணீர் குறித்தும் அவர்களுக்கு எடுத்துக் கூறப்படும். 2020-க்குள் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தலாம் என நினைத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க