`என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடும்!'- வனத்துறையினரால் கண்ணீர் சிந்தும் மாற்றுத் திறனாளி | Differently abled man accuses salem DFO over his shop removal

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (07/06/2019)

`என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடும்!'- வனத்துறையினரால் கண்ணீர் சிந்தும் மாற்றுத் திறனாளி

மாற்றுத் திறனாளி

சேலம் உயிரியல் பூங்காவில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் செல்வராஜ். இவர் ஏற்காடு சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள கருங்காலி மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி. இவர் நடத்தி வந்த பெட்டிக்கடையை சேலம் வனத்துறை அலுவலர் திடீரென காலி செய்யச் சொல்லிவிட்டார். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து விரக்தியடைந்த செல்வராஜ், தன் செயற்கைக் காலை கழற்றி சேலம் டி.எஃப்.ஓ-வுக்கு கொடுக்க முயன்றார். ஆனால், டி.எஃப்.ஓ அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் செயற்கைக் காலை வைத்துவிட்டுச் செல்ல முயன்றார். ஆனால், அங்கிருந்த உயர் அதிகாரிகள், `நிச்சயமாக டி.எஃப்.ஓ-விடம் சொல்லி பெட்டிக்கடையை நாங்க திறக்க வைக்கிறோம். செயற்கை காலை எடுத்துக்கொண்டு போங்க' என்று சொன்னதை அடுத்து தன்னுடைய செயற்கை காலை எடுத்துக்கொண்டு போனார்.

தன் செயற்கை காலை தூக்கிக்கொண்டு மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு வந்த செல்வராஜ், ``சார் என் மனைவி பெயர் பூங்கொடி. எங்களுக்கு கனகவேல், நந்தினி என ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்கிறார்கள். ரெண்டு பேரும் படிச்சுட்டு இருக்கிறார்கள். 2005-ல் எனக்கு ஒரு விபத்து நடந்து என்னுடைய வலது கால் துண்டித்துவிட்டது.

என் உற்றார், உறவினர்கள் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து எனக்கு செயற்கை கால் வாங்கிக் கொடுத்தார்கள். அந்த செயற்கைக் காலோடு கூலி வேலை செய்து என் குடும்பத்தை நடத்திட்டு இருக்கிறேன். கடந்த வருடம் வனத்துறையின் அனுமதியோடு மாதம் 5,300 வாடகை கொடுத்து சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்காவில் பெட்டிக்கடை நடத்தி வந்தேன்.

செல்வராஜ்

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒன்றரை லட்சம் செலவில் இரும்புத் தகரம் அமைத்தேன். கடையில் 50,000 மதிப்புடைய சரக்குகள் வாங்கி வைத்திருந்தேன். ஐஸ் கிரீம் மட்டும் ரூ.26,000-க்கு வாங்கி வைத்திருந்தேன். இந்தச் சூழ்நிலையில் திடீரென கடந்த மாதம் 7-ம் தேதி  சேலம் வனத்துறை அதிகாரிகள் கடையைக் காலி செய்ய சொல்லிவிட்டார்கள். `இந்தக் கடை எங்களுக்கு வாழ்வாதாரம். இது இல்லையென்றால் எங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடும். நான் மாற்றுத்திறனாளி. வேறு வேலையும் என்னால் செய்ய முடியாது' என்று கெஞ்சி அழுது பார்த்தும் வேலைக்காகவில்லை. இந்த ஒரு மாதமாக வீட்டுக்கும் வனத்துறை அலுவலகத்துக்கும் நடையாய் நடக்கிறேன். அந்தப் பெட்டிக்கடையை பார்க்கக்கூட விடவில்லை. இதனால் நானும் என் குடும்பமும் மனதளவில் பாதிக்கப்பட்டோம்.

அதனால் ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க நினைத்த வனத்துறை அதிகாரிக்கு என்னுடைய செயற்கை கால் பரிசாக கொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதற்காக குடும்பத்தோடு வனத்துறை அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால், வனத்துறை அலுவலர் இல்லை. அதனால் இந்த அலுவலகத்திலேயே என்னுடைய செயற்கை காலை வைத்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தேன். ஆனால்,  இங்கிருக்கும் அதிகாரிகள் பெட்டிக்கடையை எனக்கு பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கிறார்கள். அதனால் என்னுடைய செயற்கை காலை மீண்டும் அணிந்துகொண்டு செல்லுகிறேன்'' என்றார்.