`உங்களுக்கு இது சாதாரணம்; எங்களுக்கு பேரதிசயம்!' - மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள் | Coimbatore tribal village gets electricity for the first time

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (07/06/2019)

கடைசி தொடர்பு:19:10 (07/06/2019)

`உங்களுக்கு இது சாதாரணம்; எங்களுக்கு பேரதிசயம்!' - மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்

நகரங்களில் நாம் எதெதற்கோ போராடிக் கொண்டிருக்க, பொள்ளாச்சியை அடுத்துள்ள சில மலைவாழ் கிராம மக்கள் தெரு விளக்குக்காகப் பல வருடங்களாகப் போராடி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து ஆழியாரை ஒட்டி ஆழியார் அன்பு நகர், சின்னார்பதி, புளிய கண்டி, நவமலை உள்ளிட்ட ஏராளமான வன கிராமங்கள் இருக்கின்றன. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தங்களுக்கு அடிப்படைத் தேவையான மின்சார வசதிகூட இல்லை என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் ஏக்கம். இந்த மக்களுக்கு மின்சாரம் வசதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சோதனைச் சாவடியை முற்றுகையிடுவது என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். 

 

நீண்ட  போராட்டத்திற்குப் பிறகு மலைவாழ் மக்களுக்கு தெரு விளக்கு   

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு, கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை அழைத்து அப்போதைய பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறப்பு வட்டாட்சியர் ஜெயசித்ரா ஆகியோர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில், வன கிராம மக்கள் சார்பாக சின்னார்பதி உள்ளிட்ட வன கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி உடனடியாக செய்துதர வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. 

இதையடுத்து, கோட்டூர் பேரூராட்சியின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு புளியகண்டி பகுதியில் 12 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், நவமலை மற்றும் சின்னார்பதி வன கிராமங்களுக்கு தெருவிளக்குகள் அமைத்துத் தரப்படவில்லை. தெருவிளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி மக்கள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். அவர்களில் பலர் இரவு நேரங்களில் வன விலங்குகளுக்குப் பயந்து மலைக் குன்றுகளில் தஞ்சம் அடைந்தனர். பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தச் சூழலில் சின்னார்பதி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கும் மின் வசதி செய்துதரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.  

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மலைவாழ் கிராமங்களுக்கு தெருவிளக்கு

இந்த நிலையில், ஒரு வருடம் கழித்து சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் வாய்க்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5,20,000 மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 21 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. தெரு விளக்கு அமைப்பதற்காகக் குழி தோண்ட ஆரம்பித்ததும் அந்த வன கிராம மக்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம். ``உங்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமான விஷயமா தெரியலாம். ஆனால், எங்களுக்கு அப்படி இல்லே சாமி. இந்த லைட்டு வாங்குறதுக்கு எத்தன வருஷம் போராடிருக்கோம் தெரியுமா? எங்களுக்கு இது பேரதிசயம்.’ என்று அந்தக் கிராம மக்கள் சொல்லும்போது ஒவ்வொருவரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் புன்னகை. தெரு விளக்குகள் அமைத்துக்கொடுத்த அரசுக்கு மிக்க நன்றி. இதோடு நிறுத்திவிடாமல் கழிப்பறை, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் இந்த ஏழை மக்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பரமசிவம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க