அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரைக்குள் இரும்புக் கம்பி! - அதிர்ந்த நோயாளி | Iron piece spotted in tablet issued by ramnad primary health centre

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (07/06/2019)

கடைசி தொடர்பு:19:25 (07/06/2019)

அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரைக்குள் இரும்புக் கம்பி! - அதிர்ந்த நோயாளி

 கான்கிரீட் தளம் உருவாக்க இரும்புக் கம்பியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இங்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  இரும்புக் கம்பி கலந்த மாத்திரை கொடுத்து நோயாளிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட கம்பி கலந்த மாத்திரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது ஏராந்துறை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி சக்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அங்கு அந்நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், செவிலியர்கள் பரிசோதித்து சக்திக்கு சிப்ரோஃப்ளக்சின் (Ciproflaoxacin) என்ற தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மாத்திரையைக் கொடுத்தனுப்பியுள்ளனர்.

மாத்திரையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சக்தி உணவு உண்டுவிட்டு அதை உட்கொள்ள மாத்திரையை கவரில் இருந்து வெளியில் எடுத்துள்ளார். அந்த மாத்திரை பெரிய அளவில் இருந்ததால் அதனை இரண்டாக உடைத்து உட்கொள்ள எண்ணிய சக்தி மாத்திரையை உடைத்துள்ளார். இரண்டு துண்டான மாத்திரை தனித்தனி துண்டாக விழாமல் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி இருந்துள்ளது. இதையடுத்து, அந்த மாத்திரையை எடுத்துப் பார்த்த சக்தி அதிர்ச்சி அடைந்தார். 

உடைபட்ட அந்த மாத்திரையின் ஊடாக சிறிய அளவிலான இரும்புக் கம்பி இருந்ததுதான் சக்தியின் அதிர்ச்சிக்குக் காரணம். இதையடுத்து, வேறு ஒரு மாத்திரையை எடுத்து உடைத்துப் பார்த்து உட்கொண்டுள்ளார். நல்லவேளையாக சக்தி, இரும்புக் கம்பி இருந்த மாத்திரையை உடைக்காமல் முழுதாக விழுங்கவில்லை. அப்படி விழுங்கியிருந்தால் மாத்திரையில் கலந்திருந்த இரும்புக் கம்பியால் மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும். 

எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட கலப்பட பொருள்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து உயிரைக் காத்துக்கொள்ளவே மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறோம். இப்போது அதிலும் கம்பி கலந்துள்ள அளவுக்குக் கவனக்குறைவு ஏற்பட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு பாதுகாப்பான மருந்து மாத்திரைகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.