`கடமைக்காக நடத்தப்படுகிறதா நிபா வைரஸ் சோதனை?!' - தமிழக எல்லையில் என்ன நடக்கிறது? | TN health department officials border checking for nipah virus is eye wash, alleges coimbatore people

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:19:40 (07/06/2019)

`கடமைக்காக நடத்தப்படுகிறதா நிபா வைரஸ் சோதனை?!' - தமிழக எல்லையில் என்ன நடக்கிறது?

நிபா வைரஸ் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தீவிர சோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இரண்டு நாள்கள் கடந்துவிட்ட நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்  கேரள-தமிழக எல்லையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், கடமைக்குச் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடமைக்காக நடத்தப்படுகிறதா  சோதனை  நிபா வைரஸ் ?  

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், ஒரு கல்லூரி மாணவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், அந்த மாணவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

கடமைக்காக நடத்தப்படுகிறதா நிபா வைரஸ் சோதனை?

இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு நாள்கள் ஆன நிலையில், தமிழக-கேரளா எல்லையான கோவை க.க.சாவடியில் இன்று மதியம்தான் சோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அதுவும், தமிழக - கேரள எல்லைப்பகுதியில் சோதனை நடக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் பார்வையிடச் செல்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு இந்த அவசர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனை என்கிற பெயரில் கடமைக்காகக் கேரளாவிலிருந்து தமிழகம் வருகிற பேருந்துகளை மட்டும் நிறுத்தி, பேருந்தில் ஏறிய அதிகாரிகள், நிபா வைரஸ் பற்றி சில நிமிடங்களில் பேசிவிட்டு, `பழங்களை நன்றாக கழுவி சாப்பிடுங்கள்' என அறிவுறுத்திவிட்டு பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்கள். பேருந்தில் இருந்த பயணிகள் என்ன ஏதென்று புரியாமல் குழம்பினார்கள். பொது சுகாதாரத்துறை  அதிகாரிகள், தீவிர சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டும், வாகனங்களில் தெளிக்கக்கூடிய நோய் தடுப்பு மருந்து தெளிப்பான் உள்ளிட்ட எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் பெயருக்கு சோதனை நடத்தி வருகிறார்கள். 

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டதற்கு, ``இனிமேல்தான் மருந்துகள் தெளிக்கப் போகிறோம். துண்டுப் பிரசுரங்களும், விழிப்புணர்வு பேனர்களும் அச்சடிக்கப்பட்டுக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது'' என்று  சிரித்துக்கொண்டே பதிலளித்தார் அவர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் புகார் அளித்ததும், அங்கே உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு சோதனை நடத்த ஆரம்பித்தார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை