பெரியார் பல்கலைக்கழக விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு?! - புதிய சர்ச்சை | Another controversy erupts in salem Periyar university

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:20:40 (07/06/2019)

பெரியார் பல்கலைக்கழக விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு?! - புதிய சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதற்காக ஒரு தளம் ஒதுக்கப்பட்டும் அங்கு விடைத்தாள்கள் திருத்தப்படாமல் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் விடைத்தாள்கள் கொண்டு சென்று திருத்தப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு பணம் விரயம் ஆவதோடு விடைத்தாள்கள் பற்றிய ரகசியங்களும் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரியார்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூறும்போது, ``பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 116 இணைக் கல்லூரிகள் இருக்கிறது. இக்கல்லூரிகள் அனைத்திலும் பருவத் தேர்வுகள் நிறைவு பெற்று விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்தது.

அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள விடைத்தாள்கள் திருத்தும் தளத்தில் திருத்தாமல் மீண்டும் சேலத்தில் உள்ள பத்மவாணி, வைஷ்யா கல்லூரிகள், நாமக்கலில் உள்ள செல்வம் மற்றும் கே.எஸ்.ஆர்., கல்லூரிகள், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 5 சென்டர்களுக்கு விடைத்தாள்கள் கொண்டு சென்று திருத்தப்பட்டு வருகிறது.

குழந்தைவேலு

பல்கலைக்கழகத்திலிருந்து விடைத்தாள்களை சென்டர்களுக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவு, சென்டர்களுக்கான வாடகை செலவு, மின்சாரம் செலவு மற்றும் ஊழியர்கள் சம்பளம் என ஒரு சென்டருக்கு குறைந்தது 3 லட்சம் வீதம் 5 சென்டர்களுக்கு 15 லட்சம் வீண் செலவாகிறது. அதுமட்டுமல்லாமல் சுயநிதிக் கல்லூரிகளில் விடைத்தாள்கள் திருத்தப்படுவதால் விடைத்தாள்கள் பற்றிய ரகசியங்கள் பாதுகாக்கப்படாமல் கோல்மால் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் திருத்தினால் செலவும் மிச்சம். விடைத்தாள்கள் பற்றிய ரகசியங்களும் பாதுகாப்பாக இருக்கும்'' என்கிறார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டதற்கு, `` `பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு போதிய சேர், பெஞ்ச் இருக்கிறதா' என்று உங்களிடம் தகவல் சொன்னவரிடம் கேட்க வேண்டியதுதானே. இப்படி பொய்யான தகவல் சொல்லுறாங்க. நீங்களும் அதைக் கேட்டு எழுதுகிறீர்களே இது நியாயமா. சேர், பெஞ்ச் வாடகைக்கு எடுத்தால் 2 லட்ச ரூபாய் ஆகுது. கல்லூரியில் கொடுத்தால் வெறும் 15,000 ரூபாய்தான் ஆகுது. பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதற்கும், கல்லூரிகளில் விடைத்தாள் திருத்த கொடுப்பதற்கும் ஆகும் செலவுகளை கணக்கீடுசெய்து பல்கலைக்கழகத்துக்கு லாபம் ஈட்டும் வகையில் கல்லூரிகளில் திருத்தக் கொடுத்திருக்கிறோம். டம்மி நெம்பர் போட்டு அனுப்புவதால் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.